கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் வாகனங்கள் இறக்குமதி ; நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு விடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
அவற்றில் 38,144 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 6,286 கார்கள் உள்ளதாக அமைச்சர் சுட்டிக் காட்டினார். உள்ளூர் வாகன உற்பத்தியாளர்கள் குழுவுடன் நிதியமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், உதிரிபாகங்களை கூட்டுச்செய்து விற்பனை செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது.
இக்கலந்துரையாடலில் பல உள்நாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது குறித்து ஆழமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கும் அதே வேளையில், உள்ளூர் வாகனங்களை கூட்டுச்செய்யும் வணிகங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இறக்குமதிக்கு இந்த தடை விதிப்பது உள்ளூர் வாகன உற்பத்தயை ஊக்கம் அளிக்கிறது என்றும், ஒரு நாட்டின் வாகன உற்பத்தியை தொடங்குவது நீண்ட கால செயல்முறை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
உள்ளூர் வர்த்தகங்களை வலுப்படுத்த அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக அமைச்சர் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.