மோடியின் அமைச்சரவையில் தமிழகத்திற்கும் முக்கியத்துவம்
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்த பலர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றதையடுத்து மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக இன்று (09.06.2024) மாலை நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார்.
மோடியுடன் மந்திரிசபை உறுப்பினர்களும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்களுக்கு டெல்லியில் விருந்து வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி ஆலோசனை
இதன்போது, 100 நாள் செயல்திட்டம் குறித்து புதியதாக தேந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கு நரேந்திர மோடி ஆலோசனை வழங்கியதாகவும் மக்களுக்கு சேவையாற்ற அவர்களை அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று 50இற்கும் மேற்பட்டோர் மத்திய மந்திரிகளாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங். பியூஷ் கோயல். ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு, எச்.டி.குமாரசாமி, சிராக் பாஸ்வான், ராம் நாத் தாக்கூர், சந்திரசேகர் பெம்மாசானி, பிரதாப் ராவ் ஜாதவ், சர்பானந்த் சோனோவால், ஸ்ரீனிவாஸ் வர்மா மற்றும் ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பா.ஜ.க. கூட்டணியில் யார், யாருக்கு மந்திரி பதவி, என்னென்ன இலாகா என்பது தொடர்பாக முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள ஜெ.பி.நட்டாவின் இல்லத்தில் நேற்று காலை நடைபெற்றுள்ளது.
இதில், அமித்ஷா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்ந்து பிரதமர் மோடி வீட்டில் ஆலோசனை நடத்தப்பட்டது. நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை சுமார் 11 மணி நேரம் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
அதில் புதிய மத்திய மந்திரிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன் பிறகு இன்று காலை அமித்ஷா வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் மத்திய மந்திரி சபையில் இடம்பெறுபவர்களை பற்றிய முடிவுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அமைச்சரவையில் இணைய உள்ளவர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் டெல்லி லோக் கல்யாண்மார்க்கில் உள்ள பிரதமர் மோடி இல்லத்துக்கு உடனடியாக புறப்பட்டு வருமாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி விருந்து கொடுக்க இருக்கிறார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புதிய மந்திரிகளாக தேர்வானவர்கள் ஒவ்வொருவராக பிரதமர் வீட்டுக்கு வரத் தொடங்கினார்கள்.
அப்படி வந்தவர்கள் அனைவரும் இன்று இரவு புதிய மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டது.
அந்தவகையில், பிரதமர் இல்லத்துக்கு அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி, ஜே.பி.நட்டா, பியூஸ்கோயல், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், எல்.முருகன், சிவராஜ் சிங் சவுகான், ஜோதிர்ஆதித்ய சிந்தியா, கட்டார், ஹர்ஸ் மல்கோத்ரா, சாவித்திரி தாகூர், ரன்வீத் சிங் பிட்டு, சர்பானந்த் சோனாவால், ஜெயந்த் சவுத்ரி, பி.எல்.வர்மா, பங்கஜ்சவுத்ரி, அன்னப்பூர்ணதேவி, அர்ஜுன்ராம் மேக்வல், தர்மேந்திரபிரதான், ஜிதேந் திரசிங், ராம்தாஸ் அத்வாலே, கஜேந்திர செகாவாத் ஆகியோர் பிரதமர் இல்லத்துக்கு வந்துள்ளனர்.