தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா ரிஷி? கன்சர்வேட்டிவ் கட்சியினர் அளித்துள்ள விளக்கம்
பிரித்தானிய பிரதமரும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவருமான ரிஷி சுனக், தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக செய்திகள் பரவிவருகின்றன.
தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா ரிஷி?
பிரதமர் ரிஷி, ஊகட நேர்காணல்களில் பங்கேற்பதற்காக, இரண்டாம் உலகப்போர் நினைவேந்தல் நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறிய விடயம் பிரித்தானிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்களை சந்திப்பதைத் தவிர்த்துவருகிறார் ரிஷி. நேற்று அவர் Bedale என்னுமிடத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டபோதும், அந்த நிகழ்ச்சிக்கு ஊடகவியலாளர்கள் அழைக்கப்படவில்லை.
இதற்கிடையில், ரிஷி தனது கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா என ஊடகவியலாளர்கள் கட்சியினரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அந்தக் கேள்விக்கு பதிலளித்த கன்சர்வேட்டிவ் கட்சியினரும், கேபினட் அமைச்சருமான Mel Stride, தேர்தலுக்கு முன், கட்சித் தலைவர் பொறுப்பைத் துறக்கும் எண்ணம், தங்கள் கட்சித் தலைவரான ரிஷிக்கு இல்லை என்று கூறினார்.
அத்துடன், ரிஷி மிகுந்த நாட்டுப்பற்று உடைய மனிதர் என்றும், தன் நாட்டைக் குறித்த அக்கறை அவருக்கு அதிகம் உண்டென்றும் கூறிய Mel Stride, இரண்டாம் உலகப்போர் நினைவேந்தல் நிகழ்ச்சி முடியும் முன் வெளியேறியதற்காக அவர் மிகவும் வருந்துவார் என்பது எனக்குத் தெரியும், அந்நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை அவர் புரிந்துகொண்டிருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.