;
Athirady Tamil News

நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் ஆறு திருமுருகன் உள்ளிட்டோருடன் அனுர குமார சந்திப்பு!

0

போரில் எந்த குற்றமும் செய்யாத பாடசாலை சிறுவர்கள் குழந்தைகள் குண்டு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்து, யுத்தம் முடிவுக்கு வந்து இவ்வளவு ஆண்டுகளாகியும் நீங்கள் எல்லோரும் இணைந்து இன்னமும் இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியவில்லையே என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்கவிடம் சைவ சமயத் தலைவர்கள் ஆதங்கத்தை வெளியிட்டனர்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் நேற்று (11) மாலை ஏழு மணிக்கு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்குச் சென்று சந்திப்பில் ஈடுபட்டனர்.

சந்திப்பில் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் ஆறு திருமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, நாட்டில் நீண்டகாலமாக நிலவும் இனப்பிரச்சினையை தீர்க்க ஜேவிபி பங்காற்ற வேண்டும் என வலியுறுத்திய சைவ சமயத் தலைவர்கள், போரில் எந்த குற்றமும் செய்யாத பாடசாலை மாணவர்கள் சிறுவர்கள் குழந்தைகள் குண்டு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தபோது இடதுசாரி தலைவர்களாக இருந்த நீங்கள் ஏன் எதிர்ப்பை வெளியிடவில்லை என ஆதங்கம் வெளியிட்டனர்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரம் நீடித்து செல்லும் நிலையில் அதற்கு தீர்வு என்ன என கோரிய போது எனது சகோதரியும் காணமலாக்கப்பட்டவர் தான். எனக்கு அதன் வலி தெரியும். நாம் ஆட்சிக்கு வந்து அதற்கொரு தீர்வை காண்போம் என அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

வெடுக்குநாறிமலை உள்ளிட்ட பல இடங்களில் சைவ ஆலயங்கள் அழிக்கப்படும் நிலையில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகிறது.
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இந்த நாடு ஒருபோதும் முன்னேறாது என சைவ சமயத் தலைவர்கள் சுட்டிக்காட்டியபோது
சமயத்தின் பெயரால் சண்டை பிடிக்க கூடாது என தெரிவித்த அனுர குமார திஸாநாயக்க, நாம் ஆட்சிக்கு வந்தால் கீரிமலை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள அழிவடைந்த ஆலயங்கள் மீள புனரமைக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்து தென்னிலங்கை வேட்பாளர்கள் வடக்கிற்கு வருகின்ற போக்கு அதிகரித்துள்ள நிலையில், இன்றைய சந்திப்பில் அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எதையும் வெளிப்படையாக பேசவில்லை என்றும் அறியமுடிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.