பிரித்தானியாவைப் போல புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்த சுவிஸ் நாடாளுமன்றம் முடிவு
புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை ருவாண்டா போன்றதொரு மூன்றாவது நாட்டுக்கு நாடுகடத்துவது தொடர்பான வாக்கெடுப்பு சுவிஸ் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டுள்ளது.
யார் அந்த புகலிடக்கோரிக்கையாளர்கள்?
சுவிட்சர்லாந்தில், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட, எரித்ரியா நாட்டவர்கள் சுமார் 300 பேர் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களை ருவாண்டா போன்றதொரு ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்ப சுவிட்சர்லாந்து திட்டமிட்டுவந்தது.
இந்நிலையில், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட எரித்ரியா நாட்டவர்களை ருவாண்டா போன்றதொரு மூன்றாவது நாட்டுக்கு நாடுகடத்துவது தொடர்பான வாக்கெடுப்பு சுவிஸ் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பில், எரித்ரியா நாட்டவர்களை நாடுகடத்தும் மசோதாவுக்கு ஆதரவாக 120 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 75 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க, மசோதா வெற்றி பெற்றுள்ளது.
வாக்கெடுப்புக்கு முன் விவாதத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், பிரித்தானியாவின் ருவாண்டா நாடுகடத்தும் திட்டத்தை மேற்கோள் காட்டி பேசினார்கள்.
ஆனால், உண்மையில், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், பிரித்தானியாவில் ருவாண்டா திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது!
விடயம் என்னவென்றால், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட எரித்ரிய நாட்டவர்களை மீண்டும் அவர்களுடைய தாய்நாட்டுக்கே திருப்பி அனுப்புவதை அந்நாடு ஏற்றுக்கொள்வதில்லை.
ஆகவேதான், அவர்களை எரித்ரியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கு பதிலாக, மூன்றாம் நாடொன்றிற்கு நாடுகடத்த சுவிட்சர்லாந்து முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.