பதவியேற்ற அடுத்த நாளே ராஜினாமா – மனைவிக்காக விளக்கம் சொன்ன முதல்வர்
சிக்கிம் முதல்வர் பிரேம்சிங் தமாங்கின் மனைவி கிருஷ்ணகுமாரி ராய் திடீரென தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிக்கிம் சட்டசபை தேர்தல்
2024 நாடாளுமன்றத் தேர்தலுடன் சிக்கிம் மாநில சட்டசபை தேர்தல், நடத்தி முடிக்கப்பட்டது. சிக்கிம் மாநிலத்தில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 31 தொகுதிகளில் வெற்றி பெற்று சிக்கிம் கிராந்திக்காரி மோர்ச்சா ஆட்சியை அமைத்துள்ளது. தொடர்ந்து இரண்டாம் முறையாக பிரேம்சிங் தமாங் முதல்வராக பதவியேற்றார்.
இவருடைய மனைவி கிருஷ்ணகுமாரி ராய், நாம்ச்சி சிங்கிதாங் தொகுதியில் போட்டியிட்டு, சிக்கிம் ஜனநாயக முன்னணி (SDF) வேட்பாளர் பிமல் ராயை தோற்கடித்து வென்றார். அதைத் தொடர்ந்து கடந்த புதன் கிழமை புதிய எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார்.
இந்த நிலையில், பதவியேற்ற அடுத்த நாளே தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். அவருடைய ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் எம்.என் ஷெர்பா ஏற்றுக்கொண்டதாக சட்டசபை செயலாளர் லலித் குமார் குருங் உறுதி செய்திருக்கிறார்.
பிரேம்சிங் தமாங்
இந்த நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்வராக பெமா காண்டு பதவியேற்கும் விழாவுக்கு சென்ற சிக்கிம் முதல்வர் பிரேம்சிங் தமாங், அங்கு உரையாற்றினார். அப்போது, தன் மனைவியின் ராஜினாமா குறித்து, “கட்சியின் நலனுக்கு முன்னுரிமையளித்து, கட்சியின் ஏகோபித்த முடிவுக்கு இணங்க என் மனைவி ராஜினாமா செய்திருக்கிறார் என்பதை சிக்கிமின் அன்பான மற்றும் மரியாதைக்குரிய மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
சிக்கிம் கிராந்திக்காரி மோர்ச்சா கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர் தேர்தலில் போட்டியிட்டார்.எங்கள் கட்சியின் சார்பில், தலைவராக , அவருடைய அர்ப்பணிப்பு மற்றும் அசைக்க முடியாத ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நானும் என் மனைவி கிருஷ்ணா ராயும், உங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இருப்போம். விரைவில் புதிய வேட்பாளரை தேர்ந்தெடுத்து தொகுதி பயனடைவதை உறுதிசெய்வோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.