இன்னும் 4 நாட்களில் செந்தில் பாலாஜியின் நிலை மாற போகிறதா? வெளியாகும் தீர்ப்பு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையிடம் இருந்து விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.
கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து கடந்த 2016 -ம் ஆண்டில் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, செந்தில் பாலாஜியின் வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்தது. பின்னர், கடந்த ஆண்டு ஜூன் 14 -ம் திகதி விசாரணைக்கு பிறகு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இதன்பின்னர், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி ஜூன் 18 -ம் திகதி நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், செந்தில் பாலாஜி கைதாகி ஓராண்டு நிறைவடைந்து விட்டது.
இன்னும் 4 நாட்கள்
செந்தில் பாலாஜி தன்னை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்திருந்த மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளி வைத்திருந்தது.
பின்னர், அமலாக்கத் துறை வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை முதன்மை நீதிபதி எஸ்.அல்லி முன்பாக நேற்று நடைபெற்றது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து ஆஜரான வழக்கறிஞர் அமலாக்கத் துறையால் வழங்கப்பட்ட ஆவணங்களில் ஒருசில ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளன என்று குற்றம் சாட்டினார்.
பின்பு, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆவணங்களை வழங்கக் கோரி மனுக்களை தாக்கல் செய்ய முடியாது என்பதால், இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதம் செய்தார்
இதையடுத்து, அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது ஜூன் 19 -ம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார். மேலும், அவரது நீதிமன்ற காவலை ஜூன் 19 -ம் திகதி நீட்டித்து உத்தரவிட்டார்.