ஜீவன் தொண்டமான் விடயத்தில் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ள ஏற்றுமதியாளர் சம்மேளனம்
நுவரெலிய பீட்ரூ பெருந்தோட்டத்தில் கடந்த மே மாதம் 30ஆம் திகதி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அவரது உதவியாளர்கள் சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து, முழுமையான விசாரணைக்கு இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் (NCE) அழைப்பு விடுத்துள்ளது.
ஜீவன் தொண்டமான் குழுவின் நடத்தையை காட்டும் காட்சிகளில் ஒரு குழு வலுக்கட்டாயமாக தோட்டத்திற்குள் நுழைந்து அச்சுறுதல் மற்றும் ஆணவச் செயல்களில் ஈடுபடுவதை சித்தரிக்கிறது.
அத்தகைய நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறியுள்ள இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனம், ஜனாதிபதி மற்றும் பிற தேசிய தலைவர்களால் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளது.
தனியார் சொத்துக்கள்
தனியார் சொத்துக்களில் அத்துமீறி நுழைவது மற்றும் பலத்தைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது எனவே உடனடி சட்ட நடவடிக்கைக்கு சம்மேளனம் வலியுறுத்தல் விடுத்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன்போது அவர்களிடம் உயர்ந்த நடத்தை தரம் எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்முறை அணுகுமுறை
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைத்துவம் மற்றும் நேர்மையை கொண்டிருக்க வேண்டும் என்பதோடு தேயிலை கைத்தொழில் ஏற்கனவே சவால்களை எதிர்நோக்கியுள்ளது.
இந்தநிலையில் அண்மைய சம்பவம், குறித்த துறையின் முரண்பாடுகளை தீர்ப்பதற்கு ஒரு தொழில்முறை அணுகுமுறையின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.
எனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோதல்களில் ஈடுபடுவது, ஆக்கிரமிப்பு அல்லது சட்டத்திற்கு புறம்பான செயல்கள் மூலம் பதற்றங்களை அதிகப்படுத்துவதை விட ஆக்கபூர்வமான தீர்வுகளை கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனம் கோரியுள்ளது.