இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக – இபிஎஸ் சொன்ன காரணத்தை பாருங்க!
இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக தெரிவித்த இபிஎஸ் காரணங்களை கூறியுள்ளார்.
இடைத்தேர்தல் புறக்கணிப்பு
விழுப்புரம், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரலில் காலமானார். தொடர்ந்து, ஜூலை 10ஆம் தேதி அங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் அவர் வெளியிட்ட அறிக்கையில், “பொதுவாக தேர்தல் என்ற உடனேயே, முதலாவதாகக் களத்தில் இறங்குவது அஇஅதிமுக தான்.
தேர்தலைக் கண்டு அஞ்சுகின்ற, பயப்படுகின்ற, அச்சப்படுகின்ற இயக்கம் அதிமுக அல்ல என்பதை அனைவரும் நன்கு அறிவர். தமிழகத்தில் அலங்கோல ஆட்சியை நடத்தி வரும் திமுக, ஆளும் கட்சி என்ற அதிகாரத் தோரணையோடு அரசு எந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்தி, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அராஜகங்களையும்,
இபிஎஸ் விளக்கம்
தில்லுமுல்லுகளையும் செய்து பெற்றுள்ள வெற்றி என்பது, மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல என்பதை ஏற்கெனவே தெரிவித்திருந்தேன். திமுக ஆட்சியில், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஜனநாயக முறைப்படி சுதந்திரமாக நடைபெறுமா என்ற சந்தேகமும், கேள்வியும் எழுந்துள்ளது.
திமுக அரசின் அமைச்சர்களும், திமுக-வினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, பண பலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவார்கள். மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள். தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது.
இந்த காரணங்களால் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. திமுகவினரின் முகத்திரையைக் கிழித்து, இந்த திமுக ஆட்சியின் பல்வேறு மக்கள் விரோதச் செயல்களை நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்து,
எதிர்வரும் 2026, சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் மக்கள் ஆட்சி மீண்டும் மலர்வது உறுதி என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.