300 ஆசனங்களை இழக்கும்…. தான் பொறுப்பு என்று ஒப்புக்கொண்ட ரிஷி சுனக்
கன்சர்வேட்டிவ் கட்சிக்கு கிலியை ஏற்படுத்தும் புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில், அந்த கட்சி 300 ஆசனங்களை இழக்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வெறும் 72 ஆசனங்கள் மட்டுமே
எதிர்வரும் ஜூலை 4ம் திகதி பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் முன்னெடுக்கப்படுகிறது. இதில் லேபர் கட்சி 456 ஆசனங்களை வெல்லும் என்றே புதிய ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கன்சர்வேட்டிவ் கட்சி மிக மோசமான பின்னடைவை எதிர்கொள்ளும் என்றும், வெறும் 72 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றும் வாய்ப்பிருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்படுகிறது.
அத்துடன் Reform கட்சி 7 ஆசனங்கள் வரையில் கைப்பற்றலாம் என்றும் Liberal Democrats கட்சி 56 ஆசனங்கள் வரையிலும், Scottish National Party இந்த முறை 37 ஆசனங்கள் வரையில் கைப்பற்றும் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் கன்சர்வேட்டிவ் கட்சி இந்த முறை 293 ஆசனங்களை இழக்க உள்ளனர். ஆனால் லேபர் கட்சி 250 ஆசனங்களை அதிகமாக கைப்பற்ற உள்ளனர். 2019 பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 365 ஆசனங்களை வென்றிருந்தது.
லேபர் கட்சி 202 ஆசனங்களும், Liberal Democrats கட்சி 11 ஆசனங்கலும் வென்றிருந்தனர். ஜூலை 4ம் திகதி இந்த கருத்துக்கணிப்புகள் நிஜமானால் லேபர் கட்சி 262 ஆசனங்கள் பெரும்பான்மை பெறும் என்றே கூறப்படுகிறது.
மக்களை ஈர்க்கவில்லை
இது 1997 தேர்தல் வெற்றியைவிடவும் லேபர் கட்சியின் சாதனையாக பார்க்கப்படுகிறது. அப்போது 179 ஆசனங்கள் பெரும்பான்மையுடன் லேபர் கட்சி 418 ஆசனங்களை கைப்பற்றியிருந்தது.
இதனிடையே, பிரதமர் ரிஷி சுனக் அளித்த நேர்காணல் ஒன்றில், கன்சர்வேட்டிவ் கட்சியின் தற்போதைய நிலைக்கு தாம் பொறுப்பேற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, ரிஷி சுனக்கின் தேர்தல் பரப்புரையும் மக்களை ஈர்க்கவில்லை என்றே கூறப்படுகிறது. மிக நெருக்கடியான சூழலை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ரிஷி சுனக், பெருந்தொற்று, உக்ரைன் போர் என அடுத்தடுத்த நெருக்கடிகளை சந்தித்தது எவரொருவரின் தவறல்ல என்றார்.
மக்களின் வாழ்க்கைத் தரம் கடந்த சில ஆண்டுகளில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த நெருக்கடியில் இருந்து நாம் மிக வேகமாக வெளியேறி வருகிறோம்.
நமது அனைத்து முக்கிய போட்டியாளர்களை விடவும் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. பணவீக்கம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது, ஊதியங்கள் அதிகரித்து வருகின்றன, எரிசக்தி கட்டணங்கள் குறைந்துள்ளன.
இதனால் மக்கள் எதிர்காலம் குறித்த கவலையில் இருந்து விடுபட்டு நம்பிக்கை கொள்ளலாம் என்றார்.