;
Athirady Tamil News

முள்ளிவாய்க்கால் பாடசாலைக்கு 8 மாதமாக அதிபர் இல்லை ; வீதிக்கு வந்த மக்கள்

0

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு அ.த.க பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு பாடசாலை அதிபர் ஒருவரை நியமிக்குமாறு கோரி பிரதேச மக்கள் இன்று புதன்கிழமை (19) காலை 7 மணியளவில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

முள்ளிவாய்க்கால் கிழக்கு அரசினர் தமிழ்கலவன் வித்தியாலயத்திற்கு கடந்த 8 மாதங்களாக அதிபர் இல்லாமலே இயங்கி வருகின்றது. இப்பாடசாலையில் 57 மாணவர்கள் கற்கின்றனர்.

கண்டுகொள்ளாத வலயக்கல்வி பணிமனை
இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், மாணவர்களுக்கு கல்வி சரியாக கிடைக்கவில்லை எனவும், இது தொடர்பாக வலயக்கல்வி பணிமனையில் முறையிட்டிருந்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமது பாடசாலைக்கு நிலையாக அதிபரை நியமிக்குமாறும், அதனை எழுத்து வடிவில் ஆவணமாக தரும்வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி பாடசாலை வாயிலை மறித்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார், பெற்றோருடன் கலந்துரையாடி வீதியில் நின்ற ஆசிரியர்களை பாடசாலைக்குள் அனுப்பியிருந்தனர்.

அங்கு வருகை தந்த வலயக்கல்வி பணிப்பாளர் இ.தமிழ்மாறன் , பொலிஸார், பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், பாடசாலை ஆசிரியர்களுக்கிடையில் பாடசாலை வளாகத்திற்குள் குறிப்பிட்ட சிலருடன் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

எழுத்து மூலமான உறுதிமொழி தரமுடியாது, கிழக்கு முள்ளிவாய்க்கால் பாடசாலைக்கு அதிபர்கள் வர விருப்பம் இன்மையால் இதுவரை அதிபர் நியமிக்கவில்லை என தெரிவித்த அவர், அதிபர் ஒருவரை நியமிக்க முயற்சி எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றதாக கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.