ஊடகவியலாளர் வீடு மீதான தாக்குதலின் விசாரணையில் பொலிஸார் அஜாக்ரைதையாக இருப்பதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டு
ஊடகவியலாளர் வீடு மீதான தாக்குதலின் விசாரணையில் பொலிஸார் அஜாக்ரைதையாக செயற்படுவதுடன் கண்டும் காணாமல் இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டினார்.
ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து இன்று (19) யாழ்ப்பாண பிரதான பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.இதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்தகாலத்தில் ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் தாக்குதலுக்குள்ளான சம்பவங்கள் இடம்பெற்றது தெரிந்ததே. இந்நிலையில் அது தற்போது ஊடகவியலாளர்களின் வீடுகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
குறித்த வன்முறை இடம்பெற்று இத்தனை நாள்களாகியும் விசாரணையில் பொலிஸார் அஜாக்ரைதையாக இருப்பதாகவே தெரிகிறது.
ஜனாதிபதித் தேர்தலொன்றை எதிர்பார்த்திருக்கின்றநிலையில் ஊடகவியலாளர்களின் வீட்டை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதை ஈழத்தமிழர்களாக நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
இதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர்.
கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களுடன் தொடர்புடைய கொலைச் சம்பவம், தாக்குதல் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட் வேண்டும் – என்றார்.
கடந்த 13 ஆம் திகதி நள்ளிரவு ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டிற்குச் சென்ற இனந்தெரியாதோர் வீட்டை தீயிட்டு எரித்து சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தமை குறிப்பிடத்தக்கது.