மழைக்காக வேண்டுதல் – புதைத்த சடலங்களை தோண்டி எடுத்து எரிக்கும் வினோத கிராமம்!
மழை வர வேண்டி புதைத்த சடலங்களை தோண்டி எடுத்து கிராம மக்கள் வேண்டுதல் செய்துள்ளனர்.
கர்நாடகம்
கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பருவ மழை பொய்த்து போனதால் வறட்சியை எதிர்நோக்கி உள்ளது. இந்த மாவட்டத்தில் கிட்டத்தட்ட 3 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் உள்ளது. இதில் 2 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் பருவமழையை மட்டும் நம்பி உள்ளது.
இத்தகைய சூழலில், மழை பெய்யத் தவறினால் கழுதைகளுக்கு அல்லது பொம்மைகளுக்குத் திருமணம் செய்து வைப்பது, நிர்வானமாக ஊரை சுற்றி பிச்சை எடுப்பது போன்ற வினோதமான வேண்டுதல்களை இஜாரி லக்மபுரா கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
தோல் நோய்
மேலும், தோல் நோயால் பாதிப்படைந்தவர்களின் உடல்களைப் புதைத்தால் மழை தடைபடும் என்று இங்குள்ள மக்கள் நம்புகின்றனர். இந்நிலையில் தோல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் யாரேனும் இறந்துள்ளார்களா என்ற விவரத்தை சேகரித்து அவர்களின் உடல்களை தோண்டி, எடுத்து அவர்கள் குடும்பத்தாரின் முன்னிலையில் முறையான சடங்குகள் செய்து பின்னர் எரித்துள்ளனர்.
கடந்த இரு வாரங்களாக, இது போல் 10 பேரின் உடல்களைத் தோண்டியெடுத்து எரித்துள்ளனர். இறந்தவர்களின் உடல்களை தோண்டியெடுப்பது மிகவும் தவறானது என்ற போதிலும், ஊர் மக்களின் நன்மைக்காக இந்த நம்பிக்கைக்கு இறந்தவர்களின் குடும்பத்தினர் ஒத்துக்கொள்கிறார்கள். சிலர் அதற்கு மறுப்பு தெரிவித்தாலும் ஊர் மக்கள் அவர்களிடம் சமாதானம் பேசி சம்மதிக்க வைக்க முயற்சிக்கின்றனர்.