;
Athirady Tamil News

வடக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை அவயங்கள் பொருத்தும் முகாம் நிறைவடைந்தது

0

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை அவயங்கள் பொருத்தும் முகாம் நேற்று (19.06.2024) நிறைவடைந்தது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இந்த முகாம் நிறைவுறுத்தும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்ற வடக்கு மாகாண ஆளுநர் அவர்களும், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணை தூதுவரும் செயற்கை அவயங்கள் தயாரிக்கும் முறையினை பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து செயற்கை அவயங்கள் தயாரிப்பில் ஈடுபட்டவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

வடக்கு மாகாணத்தை சேர்ந்த 352 மாற்றுத் திறனாளிகளுக்கு 366 புதிய செயற்கை அவயங்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளதுடன் அவற்றை பராமரிக்கும் முறை தொடர்பான பயிற்சிகளும் இந்த விசேட முகாம் ஊடாக வழங்கப்பட்டுள்ளன.

இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர்,

“ மக்களின் தேவை அறிந்து இந்திய அரசாங்கம் தனது கடமைகளை முன்னெடுத்து வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மூன்றாவது தடவையாகவும் இந்திய அரசாங்கம் இந்த செயற்கை அவயங்களை வழங்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது. இதற்காக இந்திய அரசாங்கத்திற்கும், அந்நாட்டு மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் மாற்றுத் திறனாளிகளுக்கான போக்குவரத்து சேவையை மேம்படுத்த வேண்டியுள்ளது. அவர்களின் பயணங்களை இலகுப்படுத்தும் வகையிலான பஸ் வண்டிகள் இறக்குமதி செய்யப்பட வேண்டியுள்ளது. இந்த விடயம் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகளை பெற்றுக்கொடுக்கவும் வேண்டியுள்ளது.” என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.