;
Athirady Tamil News

மன உளைச்சலில் மாணவர்கள்; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

0

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்தியா முழுவதும் இன்று நடைபெறவிருந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

மாணவர்களின் நலனையும், மனநிலையையும் சிறிதும் உணர்ந்து கொள்ளாமல் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வுகள் நடத்தப்படும் விதம் தொடர்பாக பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்துள்ள நிலையில்,

நீட் தேர்வு நடத்தும் முறை வலிமையாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காகவே நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில் மத்திய அரசின் நோக்கம் சரியானதாக இருக்கலாம், ஆனால் இந்த முடிவால் மாணவர்கள் அனுபவித்த துயரமும், அவதியும் விவரிக்க முடியாதவை.

வலியுறுத்தல்
முதுநிலை நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு பல நூறு கிலோமீட்டர் களுக்கு அப்பால் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. பலருக்கு மாநிலம் விட்டு மாநிலம் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது.

நீட் தேர்வுக்காக மாணவர்கள் இரு நாட்களுக்கு முன்னதாகவே புறப்பட்டு தேர்வு மையம் உள்ள ஊரில் தங்கியிருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதால் மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். குறைந்தபட்சம் நீட் தேர்வை ஒத்தி வைக்கும் முடிவை 3 நாட்களுக்கு முன்னதாக எடுத்திருந்தால் கூட இந்த மன உளைச்சலை தவிர்த்திருக்கலாம்.

நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது முதலே அதில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளில் அதை போக்க முடியவில்லை. எனவே நீட் தேர்வு சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.