கிழக்கு இளைஞர்களுக்கு அதிக தொழில்வாய்ப்பு : ஜனாதிபதி உறுதி
எதிர்காலத்தில் கிழக்கு மாகாண இளைஞர் யுவதிகளுக்கு அதிகளவிலான தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) உறுதியளித்துள்ளார்.
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் நேற்று (23) நடைபெற்ற க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரம் கற்று வெளியேறிய மாணவர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர், யுவதிகள் ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
பெரிய அளவில் வளர்ச்சி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த ஆண்டின் இறுதிக் காலாண்டு தேர்தல் காலமாகும். எனவே, இவ்வருடம் அந்தப் பணிகளை ஆரம்பிக்க முடியாத போதிலும், அடுத்த சில வருடங்களில் பல புதிய வீட்டுத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
மேலும், இப்பகுதியில் சுற்றுலாத்துறை பெரிய அளவில் வளர்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளது. அதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, விவசாய நவீனமயமாக்கல் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த சில வருடங்களில் இந்த மாகாணத்தில் பெரும் அபிவிருத்தி ஏற்படும்.
மேலும், திருகோணமலை துறைமுகம் உட்பட திருகோணமலை நகரின் அபிவிருத்திக்காக இந்தியாவுடன் இணைந்து செயற்பட்டு வருகிறோம்.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் எதிர்காலத்தில் கிழக்கு மாகாண இளைஞர் யுவதிகளுக்கு அதிகளவிலான தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.