நொறுக்குத்தீனிக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள்: அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அதிரடி
பிரித்தானியாவுக்குள் சுமார் 28.9 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள், 18.7 மில்லியன் சிகரெட்களை கடத்திய இரண்டு இந்திய வம்சாவளியினருக்கு அளிக்கப்பட்டிருந்த தண்டனையை அதிகரிக்கவேண்டும் என குற்றப்பிரிவு பொலிசாரும், அரசு சட்டத்தரணிகளும் கோரிக்கை விடுத்ததை ஏற்று, நீதிமன்றம் குற்றவாளிகளுடைய தண்டனையை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.
நொறுக்குத்தீனிக்குள் போதைப்பொருட்கள்
வருண் பரத்வாஜ் (39) மற்றும் ஆனந்த் திரிபாதி (61) ஆகிய இருவரும், லண்டனில், Tatab Ltd என்னும் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்கள்.
அவர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து பல பொருட்களை இறக்குமதியும் ஏற்றுமதியும் செய்துவந்துள்ளார்கள்.
ஒருமுறை, விவசாயி ஒருவருக்காக இறக்குமதி செய்யப்பட்ட கால்நடை உணவில் பெட்டி பெட்டியாக ஏதோ இருப்பதைக் கண்ட அவர் பொலிசாருக்கு தகவல் கொடுக்க, அவை போதைப்பொருட்கள் அடங்கிய பெட்டிகள் என தெரியவந்தது.
பின்னர் மும்பையிலிருந்து நொறுக்குத்தீனிகள், சென்னையிலிருந்து பிஸ்கட்கள், இலங்கையில் மிதியடிகள் செய்வதற்கான தென்னை நார் மற்றும் ஆரஞ்சுப் பழங்கள், சேனைக்கிழங்கு என பல பொருட்களை இறக்குமதி செய்வதுபோல், அவற்றுடன் போதைப்பொருட்கள் மற்றும் சிகரெட்களை வருண் பரத்வாஜ் மற்றும் ஆனந்த் கடத்திவந்தது தெரியவந்தது.
தண்டனை அதிகரிப்பு
வருணுக்கு 19 ஆண்டுகளும் ஆனந்துக்கு 15 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், நம் நாட்டில் எத்தனையோ இளைஞர்களை பாதிக்கும் வகையில் போதைப்பொருட்களை இறக்குமதி செய்து குவித்த அந்த இருவருக்கும், அந்த தண்டனை போதாது என்று கூறி, குற்றப்பிரிவு பொலிசாரும், அரசு சட்டத்தரணிகளும் நீதிமன்றத்தில் வாதிட்டதைத் தொடர்ந்து அவ்விருவரின் தண்டனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தற்போது, வருணுக்கு 23 ஆண்டுகளும் ஆனந்துக்கு 20 ஆண்டுகளும் சிறைத்தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.