பூமிக்கடியிலிருந்து வெளிவந்த 4000 ஆண்டு ரகசியம் – அதிர்ச்சியில் நாட்டு மக்கள்
கிரீஸ் நாட்டில் விமான நிலைய பணிக்காக நிலத்தை தோண்டிய போது வித்தியாசமான அமைப்பு ஒன்று கிடைத்துள்ளது.
கிரீஸ்
கிரீஸ் நாட்டில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதற்காக நிலத்தை தோண்டும் பொது நிலத்திற்கு அடியில் ஒரு வித்தியாசமான அமைப்பு இருந்ததை பார்த்து அங்குள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மிகப்பெரிய சக்கரம் போல உள்ள அந்த அமைப்பை ஆராய்ச்சி செய்த போது, இந்த அமைப்பு கிமு 2000 முதல் 1700 வரை பயன்படுத்தப்பட்ட மினோவான் நாகரீகத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மேலும் இது 4000 ஆண்டுகால பழமையானது என்றும் தெரிய வந்துள்ளது.
மினோவான் நாகரீகம்
கிரீட்டில் உள்ள நினைவுச்சின்ன அரண்மனையும் இந்த காலகட்டத்தில் தான் கட்டப்பட்டுள்ளது. எனவே, மினோவான் நாகரீகத்துடன் தொடர்புடைய இந்த கட்டமைப்பின் செயல்பாடு என்னவாக இருந்திருக்கும் என விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். மேலும், இந்த அமைப்பு 157 அடி விட்டம் மற்றும் 19,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது.
இது குறித்து கிரேக்க கலாச்சார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, இந்த அமைப்பு மினோவன் கல்லறைகள் போன்று காட்சியளிப்பதாகவும், ஆனால் இந்த அமைப்புக்கு அருகில் விலங்குகளின் எலும்பும், எச்சங்களும் கண்டறியப்பட்டுள்ளதால் இது ஏதேனும் சடங்குகள் செய்யும் இடமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
மேலும் இது குறித்து ஆராய்ச்சி செய்ய உள்ளதால் விமான நிலைய பணிகள்தாமதம் ஆகலாம். ஆராய்ச்சிக்கு பாதிப்பு இல்லாமல் விமான நிலைய பணியை மேற்கொள்ள முடியுமா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.