கைப்பற்றப்பட்ட1,200 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருட்கள் அழிப்பு
பல்வேறு சந்தர்ப்பங்களில், பொலிஸ் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட1,208 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருட்கள், அவை தொடர்பான, நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததையடுத்து அழிக்கப்பட்டுள்ளன.
இதனை இலங்கை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கை, புத்தளம் -வண்ணாத்தவில்லு, லாக்டோஸ் தோட்டத்தில் உள்ள அதிசக்தி வாய்ந்த போதைப்பொருள் எரியூட்டியை பயன்படுத்தி இன்று (29) மேற்கொள்ளப்பட்டுள்ளன.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவு
614 கிலோ 36 கிராம் ‘ஐஸ்’ (கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன்), 13 கிலோ 686 கிராம் ஹெராயின், மற்றும் 581 கிலோ 34 கிராம் கெட்டமைன் ஆகியவையே அழிக்கப்பட்டன.
முன்னதாக, இந்த போதைப் பொருட்கள் இன்று முற்பகல் 9.30 மணியளவில் கொழும்பு மேல் நீதிமன்றில் உள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கையளிக்கப்பட்ட நிலையில், பின்னர் அவை வனத்தவில்லுவ லாக்டோஸ் தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டன
அங்கு, தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் பிரதிநிதிகள், அரச பகுப்பாய்வாளர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகள் ஆகியோருடன் புத்தளம் நீதவானின் மேற்பார்வையின் கீழ் இந்த அழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.