கன்சர்வேட்டிவ் கட்சியின் மோசமான தோல்வி – பதவி விலகிய ரிஷி சுனக்!
பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பிரதமர் பதவியை ரிஷி சுனக் ராஜினாமா செய்துள்ளார்.
பதவியை ராஜினாமா செய்த ரிஷி சுனக்
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி லேபர் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.
இதன் மூலம் பிரித்தானிய தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை கன்சர்வேடிவ் கட்சி சந்தித்துள்ளது.
இதன்படி, கன்சர்வேட்டிவ் கட்சியை பின்தள்ளி, இதுவரை 410 ஆசனங்களை தொழிற்கட்சி பெற்றதன் மூலம் பிரித்தானியாவின் புதிய பிரதமராக சர் கெய்ர் ஸ்டார்மர் விரைவில் பதவியேற்கவுள்ள நிலையில், தற்போது பிரதமர் பதவியை ரிஷி சுனக் ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் தோல்விக்குப் பொறுப்பேற்று வாக்காளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.
புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள சர் கெய்ர் ஸ்டார்மர்
பிரித்தானியாவில் மாற்றங்களை ஏற்படுத்தவும், மக்களுக்கான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளவும் தொழிற்கட்சி தயாராக இருப்பதாக தேர்தல் வெற்றியை தொடர்ந்து கெய்ர் ஸ்மார்மர் வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ளார்.
மக்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகள் தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், எதிர்காலத்துக்குள் எதிர்ப்பார்ப்புடன் பிரவேசிக்க முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்கட்சியின் வெற்றிக்கு பல நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.