சென்னை மக்களே ரெடியா..? ஏரிக்கு நடுவே கண்ணாடி பாலம் – எப்போது திறக்கப்படும்?
வில்லிவாக்கம் ஏரி கண்ணாடி பாலம் வருகிற தீபாவளி பண்டிகை முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணாடி பாலம்
தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏரிகள் அனைத்தும் புனரமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னை வில்லிவாக்கம் ஏரியின் நடுவே கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டு பணிகள் அனைத்தும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த பாலம் திறக்கப்பட்டால் சென்னைக்கு ஒரு முக்கிய அடையாளமாக மாறும். இதனால் இந்த பாலம் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் சென்னை மக்கள் உள்ளனர். இந்த பாலத்தின் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த பாலமானது வருகிற தீபாவளி பண்டிகை முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி முதல்
இது தொடர்பாக வெளியான தகவலில் கூறியிருப்பதாவது “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 45 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்பட்டு வரும் வில்லிவாக்கம் ஏரியின் நடுவே கடல் மட்டத்திலிருந்து 41 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை தொங்கு பாலம் வருகிற தீபாவளி முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
ஏரியை சுற்றிலும் நடைபாதை, சுற்றுச்சுவர் மற்றும் படகு சவாரி வாகன நிறுத்தம், உணவகம், ஆவின் பாலகம், இசை நீரூற்று, 2டி திரையரங்கம், மோனோ ரயில் சேவை, நீர் விளையாட்டு உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
திட்டத்தின் முதல் கட்டம் தீபாவளி முதல் செயல்பாட்டிற்கு வரும். மீதமுள்ள பணிகள் அனைத்தும் நிறைவடைந்து ஜனவரி மாதம் முழுவதுமாக திறக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.