முஸ்லீம் கட்சிகள் புகழ்வது போன்று நடைமுறையில் சம்பந்தன் ஒன்றும் செய்யவில்லை-ஐக்கிய காங்கிரஸ் கட்சி தலைவர்(video)
முஸ்லீம் கட்சிகள் புகழ்வது போன்று நடைமுறையில் சம்பந்தன் ஒன்றும் செய்யவில்லை.அவர் கூட்டமைப்பின் தலைவராக இருந்தாரே அன்றி முஸ்லீம் கட்சிகள் அவரை ஹிரோவாக கூறுவதற்கு சம்பந்தன் முஸ்லீம் சமூகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் இன்று(8) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு முதலில் இரங்கல் தெரிவித்துக்கொள்கின்றோம்.எந்த மனிதனும் மரணித்தாலும் இரங்கல்களை நாங்கள் தெரிவிப்பது சம்பிரதாயம் ஆகும்.ஆனால் தற்போது முஸ்லீம் கட்சிகள் புகழ்வது போன்று நடைமுறையில் சம்பந்தன் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்பதை நாங்கள் தைரியத்துடன் கூற விரும்புகின்றோம்.அதனால் தான் எங்கள் கட்சி அவர் தொடர்பிலான எந்தபொரு அறிக்கையும் வெளியிடவில்லை.
அவர் கூட்டமைப்பின் தலைவராக இருந்தாரே அன்றி முஸ்லீம் தமிழ் உறவிற்கு பங்களிப்பு செலுத்தவில்லை.கல்முனை என்பது எந்த கால பிரச்சினை.அவர்(சம்பந்தன்) தலைவராக இருந்த காலத்தில் இருந்து பிரச்சினை.நாங்களும் ஊடகங்கள் வாயிலாக பல வருடங்களாக கூறி வருகின்றோம்.சம்பந்தன் ஏன் இதில் தலையிடாமல் இருக்கின்றார்.அவர் கல்முனையில் உள்ள அரசியல் வாதிகளை அழைத்து கல்முனை பிரச்சினைக்கு தீர்வு கண்டு இருக்கலாம்.
ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.கல்முனை உப பிரதேச செயலக விடயம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.இதன்போது முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் இரா .சம்பந்தன்,பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஹென்றி மகேந்திரன் உட்பட நானும் கலந்து கொண்டிருந்தேன்.இங்கு சம்பந்தன் எம்.பி என்ற கட்சி தலைவர் ஒருவர் வந்திருக்கின்றார்.ஏன் இங்கு கலந்துரையாடுவதற்கு முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் (றவூப் ஹக்கீம்) வரவில்லை.அப்போது நான் அங்கு ஒரு பிரச்சினை எழுப்பினேன்.இங்கு(கலந்துரையாடல்) தலைவர்கள் தான் பேச வேண்டும்.ஒரு பிரதி தலைவரோ அல்லது உப தலைவரோ கலந்து கொண்டால் சமத்துவமாக அமையாது என்று கூறி வெளிநடப்பு செய்துவிட்டேன்.
அப்போது அந்த நேரத்திலாவது சம்பந்தன் எம்.பி முஸ்லீம் தரப்பின் சார்பாக ஹக்கீமை வரவழைத்திருக்க வேண்டும்.அதனூடாக இரு தலைவர்களும் ஒன்று சேர்ந்து கல்முனை உப பிரதேச செயலக விடயத்திற்கு தீர்வினை பெற்றிருக்க முடியும்.மிக இலகுவாக தீர்வு காண வேண்டிய பிரச்சினையை ஹக்கீமுடன் இணைந்து சம்பந்தன் எம்.பியும் இழுத்தடித்தார் என்பதே கவலைக்குரியதாகும்.ஆகவே மறைந்த ஒருவரை நாங்கள் வேண்டும் என்று குற்றஞ்சாட்டவில்லை.ஆனால் முஸ்லீம் கட்சிகள் அவரை ஹிரோவாக கூறுவதற்கு சம்பந்தன் முஸ்லீம் சமூகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை.அத்துடன் தமிழ் முஸ்லீம் உறவிற்கு கூட ஒன்றும் செய்யவில்லை என்பதை உறுதியாக கூற விரும்புகின்றோம் என்றார்.