பிரித்தானியாவில் 1.5 மில்லியன் வீடுகள் கட்டப்படும்: புதிய அரசு அறிவிப்பு
பிரித்தானியாவில் புதிதாக பதவியேற்றுள்ள லேபர் அரசு, உடனடி நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளது. அவ்வகையில், பிரித்தானியாவில் 1.5 மில்லியன் வீடுகள் கட்டப்படும் என, புதிதாக பதவியேற்றுள்ள சேன்ஸலர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசின் அறிவிப்புகள்
பிரித்தானியாவின் புதிய சேன்ஸலராக பதவியேற்றுள்ள ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves), தன் கட்சியின் சுலோகமான பிரித்தானியாவை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்னும் சுலோகத்தை செயல்படுத்தும் வகையில், பிரித்தானியாவில் 1.5 மில்லியன் வீடுகள் கட்டப்படும் என்னும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும், புதிய அரசின் பல்வேறு திட்டங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 1.5 மில்லியன் வீடுகள் கட்டிமுடிக்கப்படும் என்றும், சில குறிப்பிட்ட இடங்களில் வீடுகளைக் கட்ட திட்டமிடுவதற்கு இருக்கும் கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்படும் என்றும் கூறியுள்ளார் பிரித்தானியாவின் புதிய சேன்ஸலரான ரேச்சல் .
இங்கிலாந்தில், காற்றாலை திட்டத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உடனடியாக நீக்கப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும், தங்கள் திட்டத்துக்கு தடைகள் வரும் என்பது தனக்குத் தெரியும் என்று கூறியுள்ள ரேச்சல், என்ன தடைகள் வந்தாலும், தாங்கள் அளித்துள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் கூறியுள்ளார்.