;
Athirady Tamil News

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டால் நாட்டுக்கு காத்திருக்கும் ஆபத்து

0

வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரச ஊழியர்கள் கோரும் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டுமாயின் வற் வரியை 21சதவீதத்தால் அதிகரிக்க நேரிடும் என்று நிதியமைச்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படிச் செய்தால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் நாடு மீண்டும் ஆபத்தான நிலைக்குச் செல்லும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொதுமக்களுக்கு சிரமம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டிற்கு ஆட்சியாளர்களை நியமிக்கும் போது இலங்கை மக்கள் சிந்திக்க வேண்டிய ஒரு விடயம் உள்ளது. அடுத்த ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு யாராவது இருந்தால், அவர் எந்த வகையில் பொருத்தமானவர் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

எனவே, இந்நேரத்தில் பொதுமக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டியுள்ளது. தற்போது சில தரப்பினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தலில் வெற்றி பெற முடியாததால், அவர்களின் தனிப்பட்ட வெற்றிக்காக நாட்டை சீர்குலைக்க தயாராகி வருகின்றனர்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் கோரும் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டுமாயின் 18% வற் வரி 21% ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதனால், உழைக்கும் மக்களின் தேநீர் கோப்பையினதும், அரிசி பொட்டலத்தி னதும் விலைகள் அதிகரிக்கும். அவ்வாறு நடந்தால், வங்குரோத்தான நாடு மீண்டும் அதனை விட ஆபத்தான நிலைக்குச் செல்வதைத் தடுக்க முடியாது.

இலங்கை மக்கள் அனைவரும் இதற்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என்றும் நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.