ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்று கடலில் மூழ்கி பலியான புலம்பெயர் மக்கள்
பிரித்தானியா(UK) நோக்கி புறப்பட்ட படகில் புலம்பெயர் மக்கள் நால்வர் கடலில் மூழ்கி பலியானதாக பிரான்ஸ்(France) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கெய்ர் ஸ்டார்மர் பிரதமராக பொறுப்பேற்றதன் பின்னர் ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்று புலம்பெயர் மக்கள் மரணமடைவது முதல் சம்பவமாக இது பார்க்கப்படுகின்றது.
பிரான்சின் வடக்கு கடற்பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, Boulogne-sur-Mer அருகே மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடலில் மூழ்கி பலி
குறித்த சம்பவத்தில் 53 பேர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், இவர்களுடன் பயணப்பட்ட நால்வரே மூழ்கி பலியானதாகவும் கூறப்படுகிறது. மேலும், தற்போது மீட்கப்பட்ட அனைவரும் பிரான்ஸ் அதிகாரிகளின் கவனிப்பில் உள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இவர்கள் பயணித்த ரப்பர் படகானது சேதமடைந்துள்ளதால் இந்த மரணம் நடைபெற்றுள்ளது.
கடைசியாக ஏப்ரல் 23ம் திகதி பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற நிலையில் பிரெஞ்சு கடற்பகுதியில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டு மட்டும் இதுவரை 19 பேர்கள் இப்படியான சூழலில் மரணமடைந்துள்ளனர்.
இதேவேளை, ஆட்கடத்தும் குழுவினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.