பிரெஞ்சு நதியில் மோசமான கிருமிகள்: திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா?
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இன்னும் இரண்டு வாரங்களில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், நீச்சல் போட்டிகள் நடக்கவிருக்கும் நதியில் மோசமான கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆக, அந்த நதியில் நீச்சல் போட்டிகள் நடக்குமா இல்லையா என்பதை இயற்கை முடிவு செய்ய உள்ளது.
நதியில் மோசமான கிருமிகள்
ஒலிம்பிக் துவக்க நிகழ்ச்சிகளும், நீச்சல் போட்டிகளும் நடைபெற உள்ள Seine நதியில், ஈ.கோலை மற்றும் எண்டிரோகாக்கை என்னும் மோசமான கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கிருமிகள் நீரில் இருக்கிறது என்றால், அந்த நீரில் கழிவு நீர் கலந்துள்ளது என்று பொருள் ஆகும்.
கடந்த வாரம் நதி நீரை ஆய்வகத்தில் பரிசோதித்ததில், மனிதக்கழிவில் காணப்படும் ஈ.கோலை வகை கிருமி, நதி நீரில் அதிக அளவில் இருப்பது தெரியவந்தது. ஒரு கட்டத்தில், சாதாரணமாக நதி நீரில் அனுமதிக்கப்படும் அளவைவிட 10 மடங்கு அதிக அளவில் அந்தக் கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா?
தற்போதைக்கு அந்த நதி நீர், நீந்த தகுதியானதாக உள்ளதாக பாரீஸ் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். விடயம் என்னவென்றால், மழை பெய்தால் அந்த கிருமிகளின் அளவு அதிகரிக்கும்.
ஆக, மழை வராமல் இருந்தால், கிருமிகளின் அளவு அதிகரிக்காது, நதியில் நீச்சல் போட்டிகள் நடத்தலாம்.
எனவே, அந்த நதியில் நீச்சல் போட்டிகள் நடக்குமா இல்லையா என்பதை இயற்கைதான் முடிவு செய்ய உள்ளது எனலாம்.