;
Athirady Tamil News

பாடசாலையிலிருந்து வெளிவந்த தங்கப் புதையல்!

0

பாடசாலை ஒன்றில் தோண்டப்பட்ட குழி ஒன்றிலிருந்து தங்கப் புதையல் வெளிவந்தமை அப்பகுதி பெண்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின்(india) கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள செமகாயி என்ற பகுதியில் உள்ள பாடசாலையிலேயே இந்த புதையல் வெளிவந்துள்ளது.

நேற்று(13) இங்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதற்கான குழியை தோண்டும் பணியில் சில பெண்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மண்ணுக்கடியில் இருந்து மர்ம பொருள் ஒன்று கிடைத்துள்ளது.

இதனால் அது வெடிகுண்டாக இருக்கலாம் எனவும், அல்லது மாந்திரீகம் செய்யப்பட்ட பொருளாக இருக்கலாம் எனவும் அச்சம் நிலவியதால் அதனை பெண்கள் தூக்கி வீசியுள்ளனர்.

பெட்டி உடைந்து வெளிவந்த தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள்
அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பெட்டி உடைந்து அதற்குள் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் சிதறுவதை கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர். உடனடியாக இது தொடர்பாக பஞ்சாயத்து அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்னர் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இரவு முழுவதும் இந்தப் புதையலை பாதுகாத்த பொதுமக்கள், காலையில் காவல்துறையிடம் அதனை ஒப்படைத்தனர். அதில் 17 முத்துகள், 13 தங்க நாணயங்கள், காதணிகள், மோதிரங்கள் மற்றும் வெள்ளி நாணயங்கள் என 345 பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

தொல்லியல் துறையினர்
இதையடுத்து அந்த புதையல் மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் வேறு ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா என்பதை ஆராய தொல்லியல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதே பகுதியில் வேறு சில இடங்களிலும் இதுபோன்ற புதையல் இருக்கலாம் என்ற தகவல் அப்பகுதியில் பரவி வருவதால், அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.