;
Athirady Tamil News

ட்ரம்ப் கட்சியின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்… நன்கொடை அளித்தவர்: தாக்குதல்தாரியின் பகீர் பின்னணி

0

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீது கொலை முயற்சி நடத்திய இளைஞர் குடியரசுக் கட்சியின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசுக் கட்சி உறுப்பினர்
சனிக்கிழமை இரவு முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீதான தாக்குதல் என்பது 1981க்கு பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை படுகொலை செய்ய முன்னெடுக்கப்பட்ட மிக தீவிரமான முயற்சி என கூறுகின்றனர்.

தாக்குதல்தாரியை அடையாளம் கண்டுள்ள அதிகாரிகள், 20 வயதான Thomas Matthew Crooks என தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், தேர்தல் பரப்புரைகளுக்கான நிதி தொடர்பிலான பதிவுகளில்,

தாக்குதல்தாரி பதிவு செய்யப்பட்ட குடியரசுக் கட்சி உறுப்பினர் என்றும் ஆனால் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவளிக்கும் ActBlue என்ற அமைப்புக்கு கடந்த 2021 ஜனவரி மாதம் 15 டொலர் நன்கொடை அளித்துள்ளததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டொனால்டு ட்ரம்ப் மிக விரைவில் அறிவிக்கப்பட உள்ளார். மேலும் ஜோ பைடன் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ஜனவரி 20 ம் திகதி ActBlue என்ற அமைப்புக்கு Thomas Matthew Crooks நன்கொடை அளித்துள்ளதும் ஆவணங்களில் பதிவாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதால், மேலதிக தகவல்களை அதிகாரிகள் தரப்பு வெளியிட மறுத்துள்ளனர். மேலும், இதுவரை எந்தக் குற்றப்பின்னணியும் Crooks மீது இல்லை என்றும், ஆனால் ட்ரம்ப் மீதான கொலை முயற்சியின் பின்னணி குறித்து விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலின் பின்னணி
2022ல் Bethel Park உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று பட்டம் பெற்றுள்ளார். சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி 6.15 மணியளவில் ட்ரம்ப் மேடையில் தமது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோரிடம் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் தாக்குதல் முன்னெடுக்கப்பட, ட்ரம்ப் திடீரென்று தமது வலது பக்க காதை பொத்திக்கொள்ள, ரத்தம் அவரது முகத்தில் வழிந்துள்ளது. மட்டுமின்றி ட்ரம்ப் இருக்கும் திசை நோக்கி 8 முறை சுடப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குப் பின்னர் மக்கள் கூட்டம் அலறியபடி அங்கிருந்து வெளியேற முயன்றுள்ளனர். துரிதமாக செயல்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள், ட்ரம்பை பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்றனர்.

பாதுகாப்பு அதிகாரிகள் சூழ்ந்திருக்கும் போதும், தமது முஷ்டியை சுருட்டி மேலே உயர்த்தி போராடு, போராடு, போராடு என டொனால்டு ட்ரம்ப் கத்தியுள்ளார். ட்ரம்ப் மீதான தாக்குதலில், ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

இதனிடையே பாதுகாப்பு அதிகாரிகள் தாக்குதல்தாரியை சுட்டுக்கொன்றுள்ளனர். ட்ரம்ப் மீதான தாக்குதலின் பின்னணி குறித்து வரும் நாட்களில் தகவல் வெளியாகும் என்றே கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.