கடிதங்களை பெறவே அருச்சுனா வந்தார் என சாவகச்சேரி வைத்திய அத்தியட்சகர் தெரிவிப்பு
சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் , இன்றைய தினம் வைத்தியசாலைக்கு வருகை தந்து தனக்கு உரிய கடிதங்களை பெற்று சென்றுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கே. ரஜீவ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அருச்சுனா இராமநாதன் , தானே தற்போதும் சாவகச்சேரி வைத்தியசாலை அத்தியட்சகர் என வைத்தியசாலைக்கு சென்றமையால் இன்றைய தினம் திங்கட்கிழமை சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது .
பின்னர் வைத்தியசாலையை விட்டு , முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வெளியேறிய நிலையில் , சம்பவம் தொடர்பில் வைத்திய அத்தியட்சகர் கே. ரஜீவ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,
இன்று வைத்தியர் அருச்சுனா வருகை தந்து, அவரது கடமைக்காலத்தில் அவருக்கு வந்த கடிதங்களை பெற்றுக்கொண்டதுடன் , இதுவரை காலம் அவர் விடுப்பில் நின்றமைக்கான காரணங்களை , விடுப்பு தொடர்பான குறிப்பேட்டில் அவற்றை பதிந்து தந்து கையொப்பத்தை இட்டு சென்றுள்ளார்.
தனக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட கடிதம் தொடர்பில் உண்மை தன்மை தெரியாது எனவும் , தான் நேரில் சென்ற போதும் தனக்கு கடிதம் எதுவும் தரவில்லை என கூறினார். நான் கடிதத்தின் பிரதியை காண்பித்தேன். அதனை பார்த்து விட்டு சென்றுள்ளார்.
வைத்திய சாலையின் கடமையில் எந்த பாதிப்பும் இந்த சம்பவம் ஏற்படுத்தவில்லை. நோயாளிகளுக்கான சிகிச்சைகள் உரிய முறையில் வழங்கப்பட்டு வருகிறது. வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய வைத்தியசாலை ஊழியர்கள் தமது கடமைகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.
நாங்கள் தொடர்ச்சியாக வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக செயற்பட்டு வருகின்றோம் என தெரிவித்தார்.