ரோல்ஸ் ராய்ஸ் கார் வடிவமைப்பாளர் இயன் கேமரூன் கொலை!
பிரபல கார் வடிவமைப்பாளர் இயன் கேமரூன் கொலை செய்த கொள்ளையரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இயன் கேமரூன் என்பவர் முன்னணி கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸில் தலைமை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். ஓய்வுபெற்ற இவர் தற்போது, ஜெர்மனியில் 3 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்களாவில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையில் (ஜூலை 12) கொள்ளையர் ஒருவர், கேமரூனின் வீட்டுக்குள் புகுந்து கேமரூனை கொலை செய்துள்ளார்.
இருப்பினும் கேமரூனின் மனைவி, உடனடியாக கொள்ளையனிடம் இருந்து தப்பித்து, பக்கத்து வீட்டுக்குள் தஞ்சம் அடைந்துள்ளார். இதனையடுத்து, கேமரூனின் மனைவி காவல்துறைக்கு போன் செய்து கேமரூன் கொள்ளையரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.
கேமரூனின் மனைவி அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், கொள்ளையரின் அடையாளங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். மேலும் கேமரூனின் பங்களாவில் மோப்ப நாய்களைக் கொண்டும், ஹெலிகாப்டர் மூலமும் கொள்ளையரைத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் வாகன வணிகத்தை வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ நிறுவனம், கேமரூனின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் கேமரூன் பெரும்பங்கு வகித்துள்ளார்.