புடினிடம் பேசி உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்., இந்தியாவிடம் அமெரிக்கா வேண்டுகோள்
ரஷ்யாவுடனான உறவைப் பயன்படுத்தி, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியா-ரஷ்யா இடையேயான உறவு மிகவும் நீண்டது.
இந்நிலையில், இந்த நீண்ட கால உறவைப் பயன்படுத்தி, உக்ரைனில் நடக்கும் சட்டவிரோதப் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பேசுமாறு இந்தியாவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது
இதனை அமெரிக்க வெளியுறவுத் துறையின் பிரதிநிதி மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.
திங்கள்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மில்லர், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே வலுவான பிணைப்பு இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த நீண்டகால உறவைப் பயன்படுத்திக் கொள்ள இந்தியாவை அமெரிக்கா ஊக்குவித்து வருகிறது என்று கூறினார்.
ரஷ்யாவுடனான வலுவான உறவுகள் மற்றும் சலுகை பெற்ற நிலையைப் பயன்படுத்தி, ஜனாதிபதி புடினுடன் இந்தியா பேச வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சட்டவிரோத போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நோக்கி செயல்படுமாறு புட்டினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐ.நா. சாசனத்தை மதிக்கவும், உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மதிக்கவும் புடினுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும் என்று மில்லர் கூறினார்.