;
Athirady Tamil News

வீதி மின் விளக்குகளை அணைத்து விட்டு இருளில் கடமையாற்றும் கோப்பாய் பொலிஸார்

0

கோப்பாய் பொலிஸார் இரவு வேளைகளில் வீதி மின்விளக்குகளை அணைத்து விட்டு இருட்டினுள் நின்று சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

முச்சக்கர வண்டியில் சுற்றுக்காவல் (மொபைல்) நடவடிக்கையின் போது வீதியில் வரும் வாகனங்களை மறித்து சோதனை செய்யும் வேளை , தாம் கடமையில் நிற்கும் இடத்தில் வீதி மின் விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் நிற்பதால் வீதியால் பயணிப்போர் மத்தியில் அச்ச நிலைமை காணப்படுகிறது.

குறிப்பாக கோவில் வீதியும் , சிவன் – அம்மன் வீதியும் சந்திக்கும் சந்தியில் (கிளி கடை சந்தி ) முச்சக்கர வண்டியில் வரும் மூன்று பொலிஸார் சந்தியில் உள்ள தெரு மின் விளக்குகளை அணைத்து விட்டு இருட்டினுள் நின்று வாகனங்களை மறித்து சோதனை செய்கின்றனர்.

அயலவர் ஒருவர் பொலிஸார் மின் விளக்குகளை அணைத்தது தெரியாமல் , அதனை போட சென்ற போது , பொலிஸார் அவருடன் முரண்பட்டு , அவரை வீட்டினுள் விரட்டி இருந்தனர்.

சோதனை நடவடிக்கையின் போது , சாரதிகளையும் வாகனங்களை நிறுத்தி , வாகன விளக்குளையும் அணைக்கும்மாறு பணிக்கின்றனர். அதனால் , இருளில் வீதியில் வரும் ஏனைய வாகன விபத்துக்குள்ளாக கூடிய ஏது நிலை காணப்படுகிறது.

அதேவேளை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் கைகளில் கொட்டான்கள் , வயர்கள் என்பவற்றை வைத்திருப்பதால் வீதியில் செல்லும் பொதுமக்கள் மத்தியில் அச்ச நிலையையும் ஏற்படுத்துகின்றனர்.

அத்துடன் தமது கடமை நேரம் முடிந்து நள்ளிரவு 12 மணிக்கு தாம் அவ்விடத்தில் இருந்து செல்லும் போது அணைத்த மின் விளக்குகளை மீண்டும் போடாமல் செல்வதால் குறித்த சந்தி இருளில் மூழ்கிய நிலையிலையே காணப்படுகிறது.

அதேபோன்றே சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏழாலை பகுதியில் இரவு வேளைகளில் மின் விளக்குகளை அணைத்து விட்டு இருளில் பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீதி மின் விளக்குகளை பொருத்தி இருந்தும் , பொலிஸார் தமது தனிப்பட்ட சில தேவைகளுக்காக இரவுகளில் மின் விளக்குகளை அணைத்து விட்டு கடமையாற்றுவது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ,மருதனார்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றினை விபத்துக்கு உள்ளாக்கும் வகையில் பட்டா ரக வாகனத்தை செலுத்தியவர்கள் , மோட்டார் சைக்கிள் ஓட்டியை வீதியில் வைத்து தாக்கிய போது , வீதியில் முச்சக்கர வண்டியில் வந்த பொலிஸாரும் அவர்களுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள் ஓட்டியை தாக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.