பிரபலமான ஹொட்டலில் சயனைடு மரணம்… இதுவரை வெளியான பகீர் பின்னணி
தாய்லாந்தில் பிரபலமான ஆடம்பர ஹொட்டல் ஒன்றில் சயனைடு விஷத்தால் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பகீர் பின்னணி வெளியாகியுள்ளது.
6 பேர்களில் மூவர் பெண்கள்
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அமைந்துள்ள Grand Hyatt Erawan என்ற ஆடம்பர ஹொட்டலிலேயே குறித்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. ஹொட்டலில் சம்பவம் நடந்த அறை உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது.
கண்கானிப்பு கமெரா பதிவுகளில், பார்வையாளர்கள் எவரும் அந்த அறைக்கு செல்லவில்லை என்றே தெரிய வந்துள்ளது. இறந்தவர்களில் இருவர் அமெரிக்காவில் குடிபெயர்ந்துள்ள வியட்நாம் நாட்டவர்கள், எஞ்சிய நால்வரும் வியட்நாம் குடிமக்கள்.
மேலும், பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், சடலமாக மீட்கப்பட்ட 6 பேர்களில் மூவர் பெண்கள் என்றும், 37 முதல் 56 வயதுடைய 6 பேர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், மர்ம மரணம் தொடர்பில் வியட்நாம் மற்றும் அமெரிக்க தூதரகங்கள் தொடர்பு கொண்டுள்ளதாகவும் சம்பவயிடத்திற்கு FBI அதிகாரிகள் புறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திங்களன்று மதியத்திற்கு மேல், ஹொட்டல் ஊழியர்கள் அவர்களின் அறைக்கு உணவு வழங்கியுள்ளனர். ஆனால், செவ்வாய்க்கிழமை அவர்கள் ஹொட்டலில் இருந்து வெளியேறுவதாக குறிப்பிட்டிருந்த நிலையில், தாமதமானதை அடுத்தே ஹொட்டல் ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சுமார் 214,000 அமெரிக்க டொலர்
புதன்கிழமை பகல், 6 பேர்கள் பயன்படுத்திய தேநீர் கிண்ணத்தில் சயனைடு விஷத்தின் அம்சம் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மேலும், தாய்லாந்து பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில்,
நான்கு உடல்கள் வரவேற்பறையிலும், இரண்டு உடல்கள் படுக்கையறையிலும் கண்டெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். மட்டுமின்றி, இருவர் அறையில் இருந்து வெளியேற முயன்று, பாதியில் சுருண்டு விழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், மரணமடைந்த 6 பேர்களில் இருவர் கணவன் மனைவி என்றும், இந்த தம்பதி மற்ற இருவருடன் பணத்தை முதலீடு செய்திருந்துள்ளனர். ஜப்பானில் மருத்துவமனை ஒன்றை கட்டுவதற்காக சுமார் 214,000 அமெரிக்க டொலர் தொகையை முதலீடு செய்துள்ளனர்.
பணம் தொடர்பான விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு தாய்லாந்தில் 6 பேர்களும் ஒன்றாக கூடியுள்ளனர். ஆனால், இந்த விவகாரத்தில் தொடர்புடைய 7வது நபர் ஜூலை 10ம் திகதி தாய்லாந்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
மரணமடைந்த 6 பேர்களில் ஒருவரின் உடன் பிறந்தவர் இவர் என்றே பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், அந்த 7வது நபருக்கு இந்த மரணங்களில் தொடர்பில்லை என்றே பொலிசார் நம்புகின்றனர்.
மட்டுமின்றி, விஷம் உட்கொள்வது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் பொலிசார் நம்புகின்றனர். இதனால் இது தற்கொலை அல்ல என்றும் பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.