;
Athirady Tamil News

அடுத்த ஜனாதிபதி ரணில் தான்! உறுதியாக நம்பும் ஐதேக

0

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தனி ஒரு ஆசனத்துடன் நாடாளுமன்றம் சென்று பிரதமராகி, ஜனாதிபதியாகி உள்ளார். இதுதான் நாங்கள் அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டிய அரசியல் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கற்றுக்கொள்ள வேண்டிய அரசியல்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலை பெண்களுக்கே அதிகம் உணர முடிந்தது. அவர்கள்தான் வீட்டின் பொருளாதாரத்தை நிர்வகித்து வருபவர்கள். பெண்கள் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும்போதுதான், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனி ஒரு ஆசனத்துடன் பிரதமராகி, ஜனாதிபதியாகி உள்ளார். இதுதான் நாங்கள் அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டிய அரசியல்.

ரணில் விக்ரமசிங்க இருக்கும் வரை எங்களுக்கு ஜனாதிபதி ஒருவரை நியமித்துக்கொள்ள முடியாது என தெரிவித்து, எமது கட்சியில் இருந்து சிலர் வேறு கட்சி அமைத்துக்கொண்டு சென்றார்கள்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மரணித்த பின்னர் ஜனாதிபதி ஒருவரை நியமித்துக்கொள்ள எங்களுக்கு முடியாமல் போனது. எங்களுக்குள் ஐக்கியம் இல்லாமையே அதற்கு காரணமாகும்.

நாட்டின் அடுத்த ஜனாதிபதி
எமது கட்சிக்குள் இருந்தவர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்தனர். கட்சியில் இருந்து விரட்ட முயற்சித்தார்கள். ஆனால் கட்சியில் இருந்த ஐக்கியம் இல்லாமை நீங்கியதுடன் ஐக்கியம் ஏற்பட்டது. அதனால்தான் எங்களுக்கு இருந்த ஒரு ஆசனத்துடன் 134 வாக்குகளை பெற்றுக்கொண்டு ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டோம்.

அந்த நேரத்தில் நாடு மிகவும் குழப்பமான நிலையிலேயே இருந்தது. அவ்வாறு இருந்த நாட்டையே ஒரு ஆசனத்துடன் இருந்து ரணில் விக்ரமசிங்க தற்போது மாற்றியமைத்துள்ளார்.

அதன் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க மக்கள் ஆணையுடன் நியமிக்கப்படுவார் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.

நாட்டை அபிவிருத்தி செய்ய முடியுமான தலைவரையே தற்போது மக்கள் எதிர்பார்க்கின்றனர். வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் பரீட்சித்து பார்க்க யாருக்கும் கொடுக்க முடியாது. கத்துக்குட்டி அரசியல் கட்சிகளுக்கு எதிர்காலத்தில் ஒரு தினத்தில் நாட்டை ஆட்சி செய்ய சந்தர்ப்பம் வழங்க முடியும். ஆனால் தற்போது அதனை செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.