மேற்கு வங்கம்; மின்வெட்டுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: பலர் காயம்!
மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டைக் கண்டித்து உள்ளூர்வாசிகள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுடன் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மாணிக்கச்சாக்கில் எனயத்பூர் மாநில நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் குமார் யாதவ் கூறுகையில், “போக்குவரத்துக்காக சாலையை சீரமைக்க போலீஸார் சென்றபோது, அவர்கள் தடைகளை நீக்க மறுத்து, காவல்துறையினர் மீது கற்களை வீசத் தொடங்கினர்.
அந்தக் கும்பல் காவல்துறை வாகனங்களையும் சேதப்படுத்தியது. இந்தத் தாக்குதலில் மூன்று போலீஸார் காயமடைந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, விரைவு அதிரடிப்படை வரவழைக்கப்பட்டது. அதிரடியாக செயல்பட்ட விரைவுப்படை போராட்டக் கும்பலை கலைத்தது” என்றார்.
போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் 2 பேர் காயமடைந்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து எஸ்பி பிரதீப் குமார் யாதவ் கூறுகையில், “இதை என்னால் உறுதிப்படுத்த முடியாது. நான் மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்கிறேன். காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து விவரம் தெரிவிப்பேன்” என்றார்.
மேலும், வன்முறை ஏற்படாமல் தடுக்க கூடுதல் படைகள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.