;
Athirady Tamil News

சர்வதேச ரீதியில் முடங்கிய தகவல் தொழில்நுட்பம்: விமான சேவைகள் ஸ்தம்பிதம்

0

புதிய இணைப்பு
CrowdStrike மென்பொருளில் மேம்படுத்தப்பட்டதன் காரணமாக மைக்ரோசாப்டின் சேவையகங்கள் நேற்று  (வெள்ளிக்கிழமை) பழுதடைந்துள்ளதால் உலகம் முழுதும் விமான சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா போன்ற பல நாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் 3 ஆயிரம் விமானங்கள் தாமதமாக புறப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது 6 விமான நிறுவனங்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்கின்றன.

இது தவிர டெல்லி விமான நிலையத்தில் சில சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.சேவைகள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரித்தானியாவில் சிறு குழந்தைகளுடன் மக்கள் 3 மணி நேரம் விமான நிலையத்தில் வரிசையில் நிற்கின்றனர். இது தவிர உலகளவில் பல்வேறு துறைகள் இதனால் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதல் இணைப்பு
சர்வதேச ரீதியாகத் தகவல் தொழில்நுட்பத் துறை முடங்கியதன் விளைவாக பல நாடுகளில் விமானச் சேவைகள், ஊடகங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட துறைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், விமானச் சேவை கணினி கட்டமைப்பு பாதிக்கப்பட்டதன் காரணமாக பல நாடுகளின் விமான நிலையங்கள் மூடப்பட்டு பல விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்குச் சந்தை
அத்தோடு, பிரித்தானியாவின் சில ஊடகங்கள் செயலிழந்துள்ளதுடன் லண்டன் பங்குச் சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அவுஸ்திரேலியாவின் தொலைத்தொடர்புகள் துறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் இந்த நிலைமைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நிலைமையைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.