;
Athirady Tamil News

தமிழ் பொது வேட்பாளருக்கே எமது வாக்கு – உறுதி எடுத்த சி.வி.விக்னேஸ்வரன்

0

நாங்கள் யாவரும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எங்களின் வாக்குகளை அளிப்போம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணி முதலாவது தேசிய மகாநாடு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போது, மாநாட்டில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாம் எமது தேசிய மகாநாட்டை நடத்த வேண்டும் என்று முடிவெடுத்த போது திரு.சம்பந்தன் அவர்கள் உயிருடன் இருந்தார். இன்று அவர் இல்லை.

இன்று ஒரு பௌர்ணமி தினம்! அரசியலில் விருப்பமில்லாத என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தவர் திரு.சம்பந்தனே. அவர் செய்த செயலால் இன்று நீதித்துறை, நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மூன்றிலும் அங்கம் வகித்த ஒருவர் என்ற பெருமை என்னைத் தேடி வந்துள்ளது.

அவரை இத் தருணத்தில் நினைவு கூருவது சாலப் பொருந்தும் என்று நினைக்கின்றேன்.

அவரைப் போலவே இன்று இங்கிருக்கும் பலர் இனிவருங்காலங்களில் எம்மைவிட்டுப் பிரிந்துவிடக் கூடும். ஆனால் நாங்கள் பாடுபட்டு உருவாக்கிய இந்தக் கட்சி தொடர்ந்திருந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று மனமாரப் பிரார்த்திக்கின்றேன். வாழ்த்துகின்றேன்.

நான் வடமாகாண முதலமைச்சராக இருந்து பதவிக்காலம் முடிவடையுந் தறுவாயில் இருந்த போது என்னை விடைபெற்று செல்லவிடாது நான் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்து மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றுவதற்கு ஆவன செய்யும் வகையில் எமது இந்தக் கட்சியை உருவாக்குவதற்கு என்னுடன் தோளோடு தோள் நின்று பல்வேறு உதவிகளையும் எனக்களித்த, தொடர்ந்தும் எனக்கு அளித்துவரும் எனது வெளிநாட்டு உள்நாட்டு நண்பர்களுக்கு எனது மனப்பூர்வமான ஆழ்ந்த நன்றியறிதல்களை நான் இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அவர்களின் உதவி கிடைத்திராவிட்டால் நான் இன்று ஓய்வில் இருந்திருப்பேன். அவர்களின் பெயர்களை எடுத்துச் சொல்ல ஆசை. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக அவற்றைக் கூறுவதைத் தவிர்த்துக் கொள்கின்றேன்.

அவர்கள் பெயரையும் புகழையும் எதிர்பார்த்து இவ்வாறு செய்யவில்லை. அவர்களின் ஒரே குறிக்கோள் தமிழ் மக்களின் சுபீட்சமான வருங்காலம். அவர்களைப் போன்றவர்களே தமிழ் மக்களைத் தாங்கிப் பிடிக்கும் அத்திவாரத் தூண்கள்!

பொங்கு பானையுடன் தொடங்கி, மீனை சிறிது காலம் அரவணைத்து இன்று மானுடன் சார்ந்து நிற்கின்றோம். மான் வருது மான் வருது வழிவிடு வழிவிடு என்ற குரல் சதா கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே எமது இன்றைய பெருவிருப்பு.

இந்தக் கட்சியைத் தொடங்கியது எமது இளைஞர், யுவதிகள், பெண்கள் என்று தற்போது போதுமான பிரதிநித்துவத்தைப் பெறாத எம் சமுதாயத்தின் அங்கங்களை பலத்துடன் பயணிக்கச் செய்யவே ஆகும்.

திரு.சம்பந்தன் போல் நானும் விரைவில் என்னைப் படைத்தவனை நோக்கிப் பயணிக்க வேண்டியிருக்கும். ஆனால் மக்களிடையே இளமையுடன் அறிவையும் ஆற்றலையும் பெற்ற நீங்கள் இந்தக் கட்சியை மக்கள் சேவைக்காக மலரச் செய்ய வேண்டும்.

அதன் நறுமணம் தமிழ்ப் பேசும் மக்கள் அனைவரையும் கவர வேண்டும். கட்சி எமக்கென்ன செய்யும் என்ற மனோநிலை மாறி நாம் கட்சிக்கு என்ன செய்யலாம் என்று இளைஞர், யுவதிகள் மற்றும் பெண்கள் சிந்திக்கும் காலம் பிறக்க வேண்டும்.

2018ல் பிறந்த எமது கட்சி குறுகிய காலத்திற்குள் பதிவு பெற்றமை நற்பேறான சூழ்நிலைகளின் நிமித்தமே. எமக்குப் பதிவு கிடைக்கக் கூடாதென்று கங்கணம் கட்டிக் கொண்டு தேர்தல் ஆணைக்குழுவில் ஒருவர் இருந்தார் என்பது அண்மையில் அந்த நபர் எழுதிய ஒரு கட்டுரையில் இருந்து தான் நான் அறிந்து கொண்டேன். அவ்வாறானவர்கள் இருந்தும் கூட எமக்கு பதிவு கிடைத்தமைக்கு இறையருளையும் நற்பேறான சூழ்நிலைகளையுமே காரணம் கூற வேண்டும்.

இன்று பதிவு பெற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுள் நாமும் ஒரு கட்சி. இந்தக் கட்சியின் முதலாவது தேசிய மகாநாட்டை வைக்க வேண்டும் என்று நாம் கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபட்ட போது தான் கொரோனா நோய்த்தொற்று வந்து எம்மை நிலை குலையச் செய்தது. நிலை குலைந்த நிலையில் கட்சி உறுப்பினரின் கட்சி வழி செயற்பாடுகளும் ஸ்தம்பித்துவிட்டன.

அடுத்து உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப் போவதாக அறிவித்த போது எமது கட்சி நடவடிக்கைகள் இயக்கிவிட்ட பம்பரம் போல் மீட்சி பெற்று சுறுசுறுப்பாக நடக்கத் தொடங்கியது. அந் நடவடிக்கைகள் கூட இன்று ஸ்தம்பித்துவிட்டன.

எமது வைப்புப் பணத்தை திரும்பவும் பெற முடியவுமில்லை. தேர்தல் நடத்தும் வாய்ப்பும் கிட்டவில்லை. இந்த வருடம் எமது தேசிய மகாநாட்டை வைத்தாலென்ன என்று ஆராய்ந்த போது தான் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய அறிக்கை வெளிவந்தது.

இன்று அந்தத் தேர்தல் பற்றிய நடவடிக்கைகள் வடகிழக்குத் தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை குறித்த தேர்தலில் முன்நிறுத்த வேண்டும் என்ற நிலைக்கு எம்மைக் கூட்டி வந்துள்ளன.

இன்று மேடையில் காட்சி தரும் பெரும் மதிப்பிற்குரிய இருவரும் குறித்த பொது வேட்பாளர் பற்றிய தமது கருத்துக்களை வெளிப்படையாகவே கூறிவந்துள்ளனர்.

அதுவும் எமது பிரதம அதிதி தமது கட்சியில் முரண் கருத்துக்கள் நிலவி வருகின்ற போதும் பொது வேட்பாளருக்கான அவரின் ஆதரவு நிலையை வெளிப்படையாகவே வெளிக்கொண்டு வந்துள்ளார்.

மற்றையவரான பேராசிரியர் அவர்கள் குறித்த பொது வேட்பாளர் பற்றிய கலந்துறவாடல்களில் மிக முக்கிய பாத்திரம் வகித்து வருகின்றார். தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த அயராது அவர் உழைத்து வருகின்றார். இருவரையும் மனம் உவந்து வரவேற்கின்றோம்.

ஒஸ்லோ தீர்மானம், சிங்கள வாக்காளரிடையே வளரக்கூடிய வெறுப்பு நிலை என்றெல்லாம் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தவர்கள் தற்பொழுது போதிய அளவு ஆதரவு வாக்குகளைப் பொது வேட்பாளர் பெறாவிட்டால் என்ன நடக்கும் என்று கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.

தேர்தல் போட்டி ஒன்றில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர் “நான் கட்டாயம் தோற்கப் போகின்றேன்” என்ற மனோநிலையுடன் போட்டியிடுவதில்லை. “மக்களை என் பக்கம் திருப்ப முடியும் அவர்களின் வாக்குகளைப் பெற முடியும்” என்று எண்ணியே தேர்தலில் நிற்கின்றார்.

இவ்வாறான முரண்நிலைகளில் நின்று கருத்துரைப்பவர்கள் தாமும் சேர்ந்து பொது வேட்பாளருக்கு ஆதரவைத் தெரிவித்தால் என்ன நடக்கும் என்று சிந்திப்பதில்லை. முரண்நிலைகளில் நிற்கும் எமது சகோதர சகோதரிகள் யாவரும் எமது தமிழ் உறவுகளே. ஆகவே நாம் யாவரும் தமிழர்களாக எமது வருங்காலம் பற்றி சிந்திப்பது அவசியமாகும்.

முரண்நிலைகளில் நின்று அடம்பிடிப்பது தமிழர்களின் பிறவிக்குணம். தான் மற்றவரிலும் பார்க்கக் கெட்டிக்காரன் என்று உலகிற்கு எடுத்தியம்பவேண்டும் என்ற ஏக்கமே இவ்வாறான நடத்தைக்குக் காரணமோ நான் அறியேன்.

ஒரு வேளை நாம் எம் பிள்ளைகளை இளவயதிலேயே மட்டந்தட்ட விழைவதால் இவ்வாறன ஏக்கம் அவர்களிடையே ஏற்பட்டுள்ளதோ தெரியவில்லை.

எது எவ்வாறு இருப்பினும் நாம் யாவரும் தமிழர்களாக சிந்தித்தால் எமது வாரிசுகளின் வருங்காலம் பற்றிய கரிசனை எம்மை கட்டாயமாக ஆட்கொள்ளும். “நாங்கள் இன்று சொகுசாக வாழ்ந்துவிட்டுப் போவோம், நாளை எமது பிள்ளைகளுக்கும், தமிழ் மக்களுக்கும் என்ன நடந்தால் எமக்கென்ன” என்று சிந்திப்பவர்கள் தான் பல பிழையான கருத்துக்களை தமிழ் மக்களிடையே விதைத்து வருகின்றார்கள்.

அதுவும் கொழும்பில் எனது தமிழ் நண்பர்களின் சிந்தனை பொதுவாக ஒரேவாறாகச் செல்வதை நான் காண்கின்றேன். அவர்கள் என்னிடம் கேட்டதுண்டு – “நாங்கள் யாவரும் இலங்கையர்கள் தானே? ஏன் நாங்கள் தமிழர்களாகச் சிந்திக்க வேண்டும்?” என்று.

அவர்களுக்கு நான் கூறும் பதில் ஒன்று தான். “நாம் ஒரு நாட்டு மக்கள் என்பதில் எந்தவித முரண் கருத்துக்கும் இடமில்லை. ஆனால் வடகிழக்கு மாகாண தமிழ் மக்கள் வெறும் சிறுபான்மையினர் அல்ல. அவர்கள் வடகிழக்கின் பெரும்பான்மையினர்.

ஆகவே எமக்கான தனித்துவத்தை பெரும்பான்மையினர் ஏற்காது இவ்வாறு கூறினால் “நீங்கள் எங்களுடன் சேருங்கள். எங்களுடன் ஐக்கியமாகிவிடுங்கள்” என்பது தான் அதன் அர்த்தம்.

அதாவது எமது தனித்துவத்தை நாங்கள் மறந்துவிட வேண்டும். கூடிய விரைவில் இந்நாட்டு மக்கள் யாவரும் சிங்கள பௌத்தர்களாக மாற வேண்டும் என்பதே அதன் உள்ளர்த்தம். ஆங்கிலமொழிப் பிணைப்பால் நாங்கள் வேற்றுமையில் ஒற்றுமை கண்டோம்.

ஆனால் இன்று சிங்களமொழி மூலம் ஒற்றுமை தேடுபவர்கள் எம்மை ஆட்கொண்டு ஆள வேண்டும் என்ற எண்ணத்திலேயே செயலாற்றுகின்றனர்” என்று கூறுவேன்.

உண்மையான ஒற்றுமை என்பது மற்றவர்களின் உரிமைகளை அவர்களுக்கு கையளித்து இருதரப்பாரும் சமமான ஒரு நிலையில் நின்று கைகோர்த்து செல்லுதலே. எம்மைக் கிணற்றின் அடியில் வைத்துக் கொண்டு கிணற்றுக்கு வெளியில் நின்று ஒற்றுமை பேசுபவர்கள் ஒற்றுமை என்பதின் அர்த்தம் புரியாதவர்கள்.

வடகிழக்கு மக்களாகிய நாம் மூவாயிரம் ஆண்டுகால தொடர் வரலாற்றைக் கொண்டவர்கள். எமக்கென ஒரு மொழியுண்டு. வாழ்முறையுண்டு. வாழ் நிலங்கள் உண்டு. கலை கலாச்சாரம் உண்டு. பண்பாடு உண்டு. சிங்கள மக்கள் இவற்றை ஏற்று எமக்கான அரசியல் அதிகாரங்களை வழங்கி எம்முடன் ஒன்றிணைந்து சென்றால்த்தான் அது ஒற்றுமை. இல்லை என்றால் அது ஆக்கிரமிப்பு.

இந் நாட்டில் எமது சிங்கள வேட்பாளருக்குத் தமிழ் மக்கள் வாக்களித்தால் அது ஒற்றுமையாகாது. அது சிறுபான்மையினரின் பயத்தின் அறிகுறி. “எமக்கு என்ன நடக்குமோ என்ற பீதியில் தான் நாங்கள் உங்களுக்கு வாக்களித்தோம்” என்று கூறாமல் எம்மவர் “நாம் எல்லோரும் ஒரு நாட்டு மக்களே அதனால்த்தான் உங்களுக்கு நாம் வாக்களித்தோம்” என்று கூறத்தலைப்படுகின்றார்கள்.

அது தவறான வழிமுறை. தவறான கூற்று. அவ்வாறு சிந்தித்து நடந்து கொண்டால் எமது தனித்துவம் பறிபோய்விடும். எமது காணிகளும் வளங்களும் சூறையாடப்பட்டுவிடுவன.

எமது தொழில்கள், கைத்தொழில்கள் போன்ற பலவற்றிலும் இருந்து எம்மைப் பெரும்பான்மையினர் வெளியேற்றிவிடுவார்கள். வெளிநாடுகளுக்கு செல்வதே எமக்கிருக்கும் ஒரே தேர்வாக வந்துவிடும். பலருக்கு இன்று வெளிநாடு செல்வதே ஒரேயொரு தேர்வாகப் படுகின்றது.

படித்த பல் தொழில் விற்பன்னர்கள் கூட எம்மைவிட்டு வெளிநாடு போகவே விருப்பப்படுகின்றார்கள். எமது ஜனத்தொகை வெகுவாக குறைந்து வருகின்றது.

இவற்றை எல்லாம் சிந்தித்துத் தான் எமது வருங்கால சந்ததியினர் தமிழ்ப் பேசும் மக்களாக மாண்;புடன் வாழவழி வகுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் தமிழ் பொது வேட்பாளர் வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்தியுள்ளோம்.

நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல வேண்டும் என்று போட்டியிடவில்லை. எமது தனித்துவத்தை உலகறியச் செய்யவும் எமது ஜனநாயக உரித்தை ஐக்கிய நாடுகள் மூலம் பரீட்சித்துப் பார்க்க ஒரு வேண்டுதல் மேடையாக இத் தேர்தலைப் பாவிக்கவுமே நாம் ஒரு தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்த உத்தேசித்துள்ளோம்.

நாங்கள் பொது வேட்பாளரை நிறுத்த இருக்கின்றோம் என்றவுடன் மூன்று முக்கிய சிங்கள வேட்பாளர்களும் தமது சேனை பரிவாரங்களுடனும் படைகளுடனும் இங்கு வந்து 13ஐத் தருகின்றோம் என்று சொல்லிச் சென்றுள்ளார்கள். 13வது திருத்தம் 1987ம் ஆண்டு தொடக்கம் அரசியல் யாப்பில் இருந்து வருகின்றது. அதனை 2018ம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தாது விட்டுவிட்டு 2024ல் வந்து நடைமுறைப்படுத்துவோம் என்று கூறினால் அதன் அர்த்தம் என்ன? 13 வேண்டாம் ஆனால் தமிழ்ப் பேசும் மக்களின் வாக்கு வேண்டும் என்பதே அதன் அர்த்தம்.

தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக வலிந்து வந்து 13 பற்றிக் கூறிச் சென்றுள்ளார்கள் சிங்களத் தலைவர்கள். போட்டி முடிந்ததும் 13 வேண்டாம் என்பார்கள். “நாம் யாவரும் ஒரு நாட்டு மக்களே எங்களுடன் சேருங்கள்” என்றெல்லாம் கூறுவார்கள்.

பறிபோன அதிகாரங்களைத் திரும்ப மாகாணசபைகளுக்குக் கையளிக்க உதவுவேன் என்று எனக்குச் சொன்ன தற்போதைய ஜனாதிபதி கடைசி நேரத்தில் அந்த நடவடிக்கையில் இருந்து பின்வாங்கிவிட்டார். ஆகவே இவர்கள் தருவதாகக் கூறுவார்கள்.

தரமாட்டார்கள். தரவிடமாட்டார்கள் பௌத்த பிக்குமாரும் மற்றையோரும். அதை நாங்கள் யாவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களுடன் பேரம் பேசிப் பயனில்லை. ஏனென்றால் 13 பற்றியே அவர்கள் பேசுவார்கள். ஒற்றையாட்சியை மாற்றுவதற்கு எவரும் முன்வரமாட்டார்கள்.

எம்முடைய இன்றைய அவலம் ஒற்றையாட்சி அரசியல் யாப்பு மூலம் வந்ததே என்பதை எமது தமிழ் மக்கள் ஆழ உணர வேண்டும். எமது தனித்துவத்தை ஏற்கும் ஒரு அரசியல் யாப்பு உதயமாக வேண்டும்.

தமிழ்ப்பேசும் மக்கள் வேண்டுவது ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் கீழான 13வது திருத்தச் சட்டத்தை அல்ல. எமக்கு சர்வதேசச் சட்டத்தின் கீழ் தரப்பட்டிருக்கும் சுயநிர்ணய உரிமையையே நாங்கள் கேட்கின்றோம்.

தமிழ்ப் பொது வேட்பாளர் இந்தக் கருத்தையே தமிழ்ப்பேசும் மக்களிடையே முன்னிறுத்த இருக்கின்றார். வடகிழக்கில் ஐக்கிய நாடுகள் மக்கள் தீர்ப்பைக் கோரி தேர்தல் நடத்தட்டும்.

தமிழ்ப்பேசும் மக்கள் எதனைக் கோருகின்றார்களோ அதனை வழங்க ஐக்கிய நாடுகள் முன்வரவேண்டும் என்ற கருத்தை சர்வதேசத்தின் முன் முன்னிலைப்படுத்தவே தமிழ் பொது வேட்பாளர் காத்து நிற்கின்றார்.

13ஐத் தருவதால் எமது மக்களுக்கு விடிவு காலம் ஏற்படாது. ஏற்கனவே 13ன் கீழுள்ள பல அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தினால் எம்மிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்டுள்ளன.

இப்போது இருப்பது வெறும் கோதே! மேல்த்தோலே! அதிலும், தரப்பட்டிருக்கும் மிக சொற்ப பொலிஸ் அதிகாரங்களைக்கூட வழங்க முடியாது என்று ஒரு வேட்பாளர் கூறியுள்ளார்.

ஆகவே எங்களுடைய கட்சியின் இந்த தேசிய மகாநாட்டில் நாங்கள் யாவரும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எங்களின் வாக்குகளை அளிப்போம் என்று உறுதி பூணுவோமாக! இது பற்றிய தீர்மானம் இன்று சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது.

எமது அரசியல் குறிக்கோள்களைப் பிரதிபலிக்கும் தீர்மானங்களும் இன்று சமர்ப்பிக்கப்படுகின்றன. அவற்றை எம்மவர் ஒரு மனதாக இன்று ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகின்றேன். என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.