யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எதிரான மற்றுமொரு குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் (Jaffna) – பலாலி வீதியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்று போதை மருந்து கடத்தலில் ஈடுபடுவதாக தெரிவித்து அங்கு திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்பின் பிரகாரம் மருந்துகள் மற்றும் உணவுப் பரிசோதகர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளடக்கிய குழுவினர் குறித்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
எனினும், அங்கு அவ்வாறான பொருட்கள் எவையும் இல்லாத நிலையில் சோதனையிடுவதற்கு வந்த அதிகாரிகள் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருந்தகத்தில் சோதனை
குறித்த மருந்தக உரிமையாளரின் உறவினர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவர் இறுதிக் கிரியைகளில் பங்கெடுத்திருந்தார். அத்துடன் நேற்று முன்தினம் (22) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் மரணச் சடங்கு இடம்பெறுகின்ற காரணத்திலும் மருந்தகத்தை திறக்காத நிலை காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் விசாரணைக்கு வந்த அதிகாரிகளது கடமையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற காரணத்தினால் குறித்த மருந்தக உரிமையாளர் தனது மருந்தகத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளித்திருந்தார். ஆனால் தேடுதலின்போது போதைப் பொருள் எவையும் கிடைக்காத நிலை காணப்பட்டுள்ளது.
மருந்தகத்தின் உள்ளே சோதனையிடுவதற்கு எந்த எந்த அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது என்ற விடயம் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் குறித்துரைக்கப்பட்ட ஏழு அதிகாரிகள் மாத்திரமே மருந்தகத்தின் உள்ளே சோதனைகளை மேற்கொள்ள முடியும் என்பது வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு
பொது சுகாதார பரிசோதகர்களுக்கு மருந்தகத்தின் உள்ளே சோதனை செய்வதற்கான அதிகாரம் இல்லை. ஆனால் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது பொது சுகாதார பரிசோதகர் ஒருவரும் உள்ளே சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக மருந்தக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரது முறைகேடு தொடர்பில் குறித்த மருந்தக உரிமையாளர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு (Colombo) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
பலாலி வீதி கந்தர்மடம் சந்திக்கு அருகாமையில் மூன்று மருந்தகங்கள் உள்ளன. அதில் ஒரு மருந்தகத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி சட்டத்திற்கு புறம்பானது என பாதிக்கப்பட்ட மருந்தக உரிமையாளரால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த புதிய சட்டத்திற்கு அமைவாக வைத்தியசாலைக்கு அருகில் இல்லாத மருந்தகங்கள் இரண்டுக்கு இடையே சுமார் 250 மீற்றர்கள் தூரம் பேணப்பட வேண்டும் என்ற நியதி காணப்படுகிறது.
குறைவான தூரம்
ஆனால் புதிதாக அனுமதி வழங்கப்பட்ட மருந்தகத்துக்கும் ஏற்கனவே உள்ள மருந்தகத்துக்கும் இடையேயான தூரமானது 200 மீற்றருக்கும் குறைவாகவே காணப்படுகிறது. தூரத்தை அளவிடுவதற்கு கூகுள் வரைபடம் உத்தியோகபூர்வமாக பயன்படுத்தப்படுகிறது.
இரண்டு மருந்தகங்களுக்கு இடையேயான தூரத்தை அதிகரித்து காண்பிப்பதற்காக பிரதான வீதியையோ, கூகுள் வரைபடத்தினையோ கருத்தில் கொள்ளாது, மாநகர சபையில் பதிவில் இல்லாத சிறிய வீதிக்கு புதிய பெயரை சூட்டி அந்த தூரத்தை உருட்டி அளக்கும் வீல் அளவீட்டு முறை மூலம் அளவிட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் செய்த முறைப்பாட்டுக்கு எதிராக சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறித்த சோதனை நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கலாம் என மருந்தக உரிமையாளர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எதிராக வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.