;
Athirady Tamil News

தேசபந்து தென்னகோனுக்கு இடைக்காலத் தடை : உயர் நீதிமன்றம் உத்தரவு

0

தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) காவல்துறை மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

காவல்துறை மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி கர்தினால் மல்கம் ரஞ்சித் (Malcolm Ranjith) மற்றும் பங்குதாரர்களால் 09 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று (24) இந்த உத்தரவை அறிவித்துள்ளது.

வழக்கு விசாரணை
இதன்படி, இந்த இடைக்கால உத்தரவு நடைமுறையில் இருக்கும் காலப்பகுதியில் காவல்துறை மா அதிபர் பதவிக்கு சட்டத்திற்கு அமைய பொருத்தமான நபரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை தீர்ப்பை அறிவித்த மூவரடங்கிய அமர்வின் தலைவரான நீதியரசர் யசந்த கோதாகொட, இந்த மனு மீதான விசாரணையின் போது நீதிமன்றத்தின் முன் வலுவான வழக்கை நிறுவுவதில் மனுதாரர்கள் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

இதன்படி, குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்த நீதிமன்றம் தீர்மானிக்கும் என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

விதிக்கப்பட்ட தடை
மேலும், இந்த மனு விசாரணைக்கு வரும் வரை, பிரதிவாதியான தேசபந்து தென்னகோன், காவல்துறை மா அதிபராக கடமையாற்றுவதற்கும், தனது அதிகாரங்களைச் செயற்படுத்துவதற்கும், கடமைகளை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு, மனுக்கள் தொடர்பான ஆட்சேபனைகளை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், நவம்பர் 11ஆம் திகதி மனுவை மீண்டும் விசாரிக்குமாறு உத்தரவிட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.