;
Athirady Tamil News

எல்லா மாநிலங்களின் பெயரையும் குறிப்பிட முடியாது: நிர்மலா சீதாராமன் விளக்கம்

0

மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் எந்தவொரு மாநிலத்தையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த பொது பட்ஜெட், நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் என காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக குற்றம்சாட்டியிருந்த நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்று துவங்கியதும், பட்ஜெட் ஒருதலைபட்சமானது என்று கூறி எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக எம்.பி.க்கள் குரல் எழுப்பினர்.

இதற்கு நிர்மலா சீதாராமன் விளக்கம் அளிக்க முன்வந்தபோது, அவரது பேச்சை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு மாநிலத்தையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. மத்திய பட்ஜெட்டில் ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில், பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் பேசுவது துரதிருஷ்டவசமானது, குறிப்பாக மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சு. மத்திய பட்ஜெட்டில் நான் இரண்டு மாநிலங்களின் பெயரை மட்டுமே குறிப்பிட்டதாகவும், மற்ற மாநிலங்களின் பெயர்களை குறிப்பிடவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டுகிறார். பட்ஜெட் உரை குறித்து நான் ஒரு சில வார்த்தைகள் விளக்க விரும்புகிறேன். நாட்டின் பல ஆண்டு காலம் காங்கிரஸ் ஆட்சிதான் நடந்துள்ளது, பல பட்ஜெட்களை காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்திருக்கும், ஒவ்வொரு பட்ஜெட்டிலும், அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் குறிப்பிட முடியாது என்று அவர்களுக்கே தெரிந்திருக்கும்.

இந்த பட்ஜெட்டில் வத்வன் பகுதியில் துறைமுகம் அமைக்க திட்டமிடப்பட்டுளள்து. ஆனா, மகாராஷ்டிரத்தின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை, எனவே, அவர்களை புறக்கணித்துவிட்டதாக அர்த்தமாகுமா? இந்த திட்டத்துக்காக ரூ.76 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

நான் பட்ஜெட் உரையின்போது பல திட்டங்களைப் பற்றி அறிவித்தேன், ஆனால், பல மாநிலங்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.