பிஜி நாட்டை பற்றி தெரியாத உண்மைகள் மற்றும் வரலாறு
பிஜி நாட்டை பற்றிய வரலாறு, மக்கட்தொகை மற்றும் சில முக்கிய தகவல்களை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
பிஜி நாட்டின் வரலாறு
மெலனீசியாவில் பசிபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள ஒரு தீவு நாடு தான் பிஜி (Fiji) ஆகும். இதன் அதிரகாரப்பூர்வமான பெயர் பிஜி குடியரசு (Republic of Fiji) ஆகும்.
இது நியூசிலாந்தின் வடக்குத் தீவில் இருந்து வடகிழக்கே 1100 கடல்மைல்கள் தூரத்தில் இருக்கிறது. இங்குள்ள பெரும்பான்மையான தீவுகள் அனைத்தும் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த எரிமலை சீற்றத்தால் தோன்றியவை.
அதில் லேவு, தவெயுனி ஆகிய தீவுகளில் புவிவெப்பச் சீற்றங்கள் உள்ளன. இந்த தீவு கூட்டத்தில் மொத்தம் 332 தீவுகள் உள்ளன. அதில் 110 தீவுகளில் தான் மக்கள் வசிக்கின்றனர்.
முக்கிய தீவுகளாக விட்டி லெவு, வனுவா லெவு ஆகிய தீவுகள் பார்க்கப்படுகிறது. இந்த நாட்டின் மக்கட்தொகை 9.3 லட்சம் ஆகும். இந்த மொத்த மக்கட்தொகையில் 87 விழுக்காட்டினர் விட்டி லெவு, வனுவா லெவு ஆகிய இரு தீவுகளிலும் வசிக்கின்றனர்.
இந்த நாட்டின் தலைநகரான சுவா, விட்டி லெவு தீவில் அமைந்துள்ளது. இந்த தீவின் கரையோர பகுதிகளில் பெரும்பான்மையான மக்கள் வசிக்கின்றனர்.
இந்த நாடானது 1970 வரை சுமார் ஒரு நூற்றாண்டு காலம் வரை பிரித்தானியாவின் காலனித்துவ நாடாக இருந்தது. அதற்கு முன்னதாக எபெனிசா சாக்கோபாவு என்பவர் பழங்குடியினரை ஒருங்கிணைத்து தன்னை அரசனாக அறிவித்துக் கொண்டார்.
இதன்பின்னர், 1874 -ம் ஆண்டில் பிஜியைத் தமது குடியேற்ற நாடாக அறிவித்த பிரித்தானியர் அங்குள்ள சர்க்கரை தோட்டங்களில் பணிபுரிவதற்காக இந்தியர்களை வேலைக்கு அமர்த்தினர்.
அப்போது, பிரித்தானிய ஆளுனராக இருந்த ஆர்தர் சார்ல்சு அமில்ட்டன்-கோர்டன் என்பவர் உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தடை செய்திருந்தார்.
1942 -ம் ஆண்டில் பிஜி நாட்டின் மக்கட்தொகை 210,000 ஆகும். இதில் 94,000 இந்தியர்கள், 102,000 பேர் பிஜியர்கள், 2,000 பேர் சீனர்கள், 5,000 பேர் ஐரோப்பியர்கள் ஆகும்.
இதையடுத்து, 1970 -ம் ஆண்டில் பிரித்தானியாவிடம் இருந்து பிஜி விடுதலை பெற்றது. அப்போது அங்கு இந்தியர்கள் அதிகமாக இருந்ததால் மக்களாட்சி அமைப்பானது இராணுவப் புரட்சியால் தடைப்பட்டது.
அதன்பின்னர் இரண்டாவது இராணுவப் புரட்சியால் அரசர் மற்றும் ஆளுநர் பதவிகளில் இருந்து அகற்றப்பட்டனர். இந்த காரணத்தால் பிஜி இந்தியர்கள் பெருமளவில் நாட்டை விட்டு வெளியேறினர். அதனால் அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் வருமானம் & அரசியல்
பிஜி நாட்டில் காட்டுவளம், கனிமவளம், மீன் வளங்கள் ஆகியவை உள்ளது. பசிபிக் தீவுப் பகுதியில் பொருளாதாரத்தில் அதிக வளர்ச்சியடைந்த நாடுகளில் பிஜி நாடு முக்கியமாக கருதப்படுகிறது.
சுற்றுலாத்துறையும், சர்க்கரை ஏற்றுமதியும் தான் இந்த நாட்டின் வெளிநாட்டு வருமானங்களை கொடுக்கும் முக்கியமான துறைகளாகும். இந்த நாட்டின் நாணயம் பிஜி டொலர் ((FJD) ஆகும்.
இந்த நாட்டில் நாடாளுமன்ற சார்பாண்மை மக்களாட்சிக் குடியரசு முறையில் ஆட்சி செய்யப்படுகிறது. இந்த நாடு விடுதலை பெற்ற பிறகு 4 முறை ராணுவத் தலையீட்டால் ஆட்சிக் கவிழ்ப்புகள் நடைபெற்றுள்ளது.
இந்த நாட்டில் பெரும்பாலும் உள்ளூர் பிஜியர்கள் தான் உள்ளனர். இவர்கள் மெலனீசியர்கள் ஆவார்கள். இங்குள்ள இந்தியர்களில் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் உள்ளனர்.
மத அடிப்படையில் பார்க்கையில் கிறித்தவர்கள் 64.5%, இந்துக்கள் 27.9%, முஸ்லீம்கள் 6.3%, சீக்கியர் 0.3% உள்ளனர். இந்த நாட்டில் ஆங்கிலமும், பிசித் தீவின் பூர்வ குடியினர் மொழிகளும், இந்தியக் குடியேறிகளின் மொழிகளும் பேசபப்டுகிறது.
இங்குள்ள கடல்வாழ் உயிரினங்கள் மற்ற நாடுகளில் அழிந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை பார்ப்பதற்காகவே பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் பிஜி நாட்டிற்கு வருகின்றனர்.
பிஜி நாட்டில் தமிழர்கள்
தமிழ்ப் பின்புலத்துடன் தொடர்புடையை பிஜி மக்களை பிஜி தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் 1903 மற்றும் 1916 -ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பிரித்தானிய காலனித்துவ அரசால் பிஜிக்கு கொண்டுவரப்பட்டவர்கள்.
இவர்களை சிலர் மந்தராசி என்றும் அழைக்கின்றனர். மதராசி என்ற வார்த்தை மருவி மந்தராசி என்று மாறியுள்ளது.
குறிப்பாக இந்த நாட்டில் 37 விழுக்காட்டினர் இந்தியர்கள் உள்ளனர். அவர்கள், வட இந்திய மொழிகளான இந்தி, குஜராத்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளையும், தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளையும் பேசுகின்றனர்.