ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பின் பின்னர் அனுர தரப்பின் முதல் நகர்வு
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, தேர்தல் கண்காணிப்பு நிலையமொன்றை அமைத்துள்ளது.
இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுமென இன்று உத்தியோகப்பபூர்வமாக சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையிலேயே, தேசிய மக்கள் சக்தி குறித்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கண்காணிப்பு நிலையம்
இந்த நிலையில், தேர்தலின் போதும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போதும் இடம்பெறும் ஊழல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக தேசிய மக்கள் சக்தி தேர்தல் கண்காணிப்பு நிலையமொன்றை அமைத்துள்ளது.
சிறிலங்காவின் ஓய்வுபெற்ற காவல்துறையினர் மற்றும் அமைச்சர்களை உள்ளடக்கிய 8 பேர் கொண்ட குழுவினரால் இந்த நிலையத்தின் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மக்களின் வாக்களிக்கும் உரிமை
இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படும் தேர்தல் தொடர்பான தவறான நடவடிக்கைகள் குறித்து இந்த நிலையம் ஆராயுமென தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார்.
மக்களின் வாக்களிக்கும் உரிமை பாதுகாக்கப்பட்டு சுதந்திரமான முறையில் இலங்கையில் தேர்தல் நடைபெறுவதை குறித்த நிலையம் உறுதிப்படுத்துமென அவர் கூறியுள்ளார்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் கீழ் அமைக்கப்பட்ட இந்த தேர்தல் கண்காணிப்பு நிலையம், சுயாதீனமாக செயல்படுமென அவர் மேலும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.