;
Athirady Tamil News

கமலா ஹாரிஸ் குரலில் போலி காணொளி : எலோன் மஸ்க்கால் வெடித்தது சர்ச்சை

0

அமெரிக்க (US) ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் (Kamala Harris) பேசியதைப் போன்று செயற்கை நுண்ணறிவால் (AI) தயாரிக்கப்பட்ட போலி காணொளியை டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் பகிர்ந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப்பிற்குத் (Donald Trump) தனது ஆதரவைத் தெரிவித்து வரும் எலோன் மஸ்க் (Elon Musk) தனது எக்ஸ் பதிவில் கமலா ஹாரிஸ் பேசியதாக போலி காணொளி ஒன்றை இரு தினங்களுக்கு முன் பதிவிட்டு ‘இது அற்புதமாக இருக்கிறது’ என எழுதியிருந்தார்.

இது சமூக வலைத்தளவாசிகள் தரப்பில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், மூன்று மாதங்களில் நடக்கவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரங்களில் செயற்கை நுண்ணறிவால் ஏற்பட இருக்கும் பாதிப்புகள் குறித்து சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

எலோன் மஸ்க்கின் பதிவு
ஜனநாயகக் கட்சி வேட்பாளரன கமலா ஹாரிஸ் கடந்த வாரம் பிரசாரத்திற்காகப் பகிர்ந்திருந்த காணொளியைப் போலவே போலிக் காணொளியும் தயாரிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

கமலா ஹாரிஸ் குரல் போலவே செயற்கை நுண்ணறிவால் மாற்றம் செய்யப்பட்ட குரல் பதிவைக் கொண்ட அந்தக் காணொளியில், ட்ரம்ப்புடன் நடந்த விவாதத்தில் ஜோ பைடனின் முதுமை அம்பலப்படுத்தப்பட்டதால் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் ஆகிய நான் தேர்தலில் நிற்கிறேன் என கமலா ஹாரிஸ் கூறுவது போல் உள்ளது.

மேலும், 59 வயதான கமலா ஹாரிஸை ‘பன்முகத்தன்மையின் கூலி’ எனவும், அவர் ஒரு பெண் மற்றும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் எனவும் குறிப்பிட்டுள்ளதுடன் ஹாரிஸுக்கு முதல் விடயமாக நாட்டை வழிநடத்தத் தெரியாது என அவரே சொல்வது போல போலியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

கமலா ஹாரிஸ் விளக்கம்
இதுகுறித்து கமலா ஹாரிஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில், “அமெரிக்க மக்களுக்கு துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வழங்கும் உண்மையான சுதந்திரம், வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பு மட்டுமே தேவைப்படும் என நம்புகிறோம்.

எலோன் மஸ்க், டொனால்ட் ட்ரம்ப் வழங்கும் போலியான, சித்தரிக்கப்பட்ட பொய்கள் அவர்களுக்கு வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காணொளியை முன்னதாக வலையொளித்தளம் மற்றும் எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்த நபர் இதனைப் பகடி எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், எலோன் மஸ்க் எதையும் குறிப்பிடாமல் பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.