அடக்குமுறைகளை பரிகாரமின்றியே தமிழ் மக்கள் நாட்டில் வாழ்கின்றனர் – கறுப்பு யூலை நினைவேந்தலில் நிரோஸ்
கறுப்பு யூலை தமிழ் மக்கள் மீது இன ரீதியிலான திட்டமிடப்பட்ட அரச பயங்கரவாதம் பிரயோகிக்கப்பட்ட ஓர் வன்முறையாகும். இவ்வாறான ஏற்றுக்கொள்ள முடியாத துரதிஸ்ட நிலைமைகள் நாட்டின் வழமையாக இருந்துள்ள போதும் அவற்றுக்கு அரசு பொறுப்புக்கூறல் மற்றும் மீள நிகழாமை பொறிமுறையை உறுதிப்படுத்தாமையினால் தமிழ் மக்கள் ஆகிய நாம் உள்நாட்டில் மனக்கசப்புடனும் அதிர்ப்தியுடனும் அடக்குமுறையை சகித்தே வாழ்கின்றோம். இவ்வாறு ரொலோவின் தலைமைக்குழு உறுப்பினரும் முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.
தந்தை செல்வா கேட்போhர் கூடத்தில் ஜனநாயகத்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சனிக்கிழமை நடைபெற்ற கறுப்பு யூலை நினைவேந்தலில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் பல இனக் கலவரங்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள போதும் கறுப்பு யூலை இனக்கலவரம் சர்வதேச கவனத்தினை ஈர்த்ததாகக் காணப்பட்டது. அது முமையாக அரச திட்டமிடலிலேயே இடம்பெற்றது. அரசின் முழுக் கட்டுப்பாட்டில் காணப்பட்ட வெலிக்கடைச் சிறைக்குள் எமது இயக்கத்தின் தாபகத் தலைவர் தங்கத்துரை, தளபதிகளான குட்டிமணி, ஜெகன் உள்ளிட்ட தலைவர்களை நாம் ஆகுதியாக்கியுள்ளோம். அவர்கள் போன்ற செயல்வீரமும் அர்ப்பணிப்பும் தியாகமும் மிக்க தலைவர்களை எமது கட்சி மாத்திரம் இழக்கவில்லை. மாறாக தமிழ்த் தேசியமே இழப்பினைச் சந்தித்தது. தமது மரணத்தில் தம் கண்களை கொடையளித்து தமது கண்கள் மலரும் விடுதலை பெற்ற தாயகத்தை காணும் என கனவு கண்ட தலைவர்கள் கண்கள் பிடுங்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இவ்வாறாக தலைவர்கள் உள்ளிட்ட 53 பேரை அரச அனுசரனையில் கடும் சித்திரவதைகளுக்குள்ளாக்கி படுகொலை செய்தனர்.
வன்முறைகள் வாயிலாக டயர்கள் பேட்டு எரித்து மூவாயிரம் தமிழர்களை அழித்தனர். 25 ஆயிரம் பேரை காயப்படுத்தினர். 50 ஆயிரம் பேரை உள்ளாட்டில் சொத்துக்களை சூறையாடியும் கொன்றும் இடம்பெயர்ந்தோராக்கினர்.
இந்தச் சம்பவங்கள் அரசின் உயர்மட்ட திட்டமிடலிலேயே நடந்தன. அதற்கு உதாரணமாக, வன்முறைக்கு இரு வாரங்களுக்கு முன் (193 யூலை 11) லண்டனைத் தளமாகக் கொண்ட டெய்லி டெலிகிராப் பத்திரிகைக்கு பேட்டியளித்த அரசுத்தலைவர் ஜெயவர்த்தனா, தமிழ் மக்கள் விடயத்தில் தமக்குக் கவனம் கிடையாது. அவர்களுக்கு எது நடந்தாலும் சிங்கள மக்கள் மகிழ்வார்கள் என்று அரச பொறுப்புணர்வுத் துறப்பினை வெளிப்படுத்தினார். நடந்த சம்பவங்களை கண்காணிப்புக்கு உட்படுத்திய பன்னாட்டு நீதித்துறை வல்லுநர்கள் ஆணையம் (International Commission of Jurists, ICJ) நடைபெற்றவற்றை இனப்படுகொலை என சுட்டிக்காட்டியது.
இவ்வாறாக உள்நாட்டிலேயே எண்ணற்ற அநியாயங்களை எதர்கொண்டவர்களாக அவற்றுக்கான நீதிக்கு பல தசாப்தங்கள் கடந்தும் கிடைக்கப்பெறாது போராடும் ஓர் இனமாக நாம் வாழ்கின்றோம் என்பதே இன்றைய யதார்த்தம் என தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.