;
Athirady Tamil News

வயநாடு நிலச்சரிவு: பலியானவர்கள் எண்ணிக்கை 24-ஆக உயர்வு

0

கேரள மாநிலம் வயநாட்டில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நிலச்சரிவில் சுமார் 100 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே இன்று(ஜூலை 30) அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் மலைப் பிரதேசமான வயநாடு மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

பலியான 6 பேரின் உடல்கள் மேப்பாடி சமூக நல மையத்துக்கும், 5 பேரின் உடல்கள் மருத்துவக் கல்லூரிக்கும் கொண்டுவரப்பட்டுள்ளதாக கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை மையத்திலிருந்து 2 விமானப்படை ஹெலிகாப்டர்கள் வயநாட்டில் மீட்புப் பணிகளுக்கு உதவிட அனுப்பப்பட்டுள்ளன. இன்று காலை 7.30 மணியளவில் அந்த ஹெலிகாப்டர்கள் வயநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளன.

மீட்புப்பணியில் 250 வீரர்களும், உள்ளூர்வாசிகளும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை பெங்களூரில் இருந்து வயநாடு விரைந்துள்ளது. வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு உதவிகளை வழங்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தோருக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.