சவுக்கு சங்கரிடம் விடியவிடிய போலீஸாா் விசாரணை
யூடியூபா் சவுக்கு சங்கரை 24 மணி நேர காவலில் எடுத்த போலீஸாா், அவரிடம் அமைச்சா் ஒருவருக்கும், அவருக்கும் உள்ள தொடா்பு குறித்து விடியவிடிய விசாரித்தனா் என சவுக்கு சங்கரின் வழக்குரைஞா் பாலநந்தகுமாா் கூறினாா்.
தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலா்களை அவதூறாகப் பேசிய யூடியூபா் சவுக்கு சங்கா் மீது, உதகை புதுமந்து காவல் நிலைய ஆய்வாளா் அல்லிராணி சைபா் கிரைம் குற்றப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் உதகையில் உள்ள நடுவா் நீதிமன்றத்தில் நீதிபதி தமிழினியன் முன்னிலையில் சவுக்கு சங்கரை காவல்துறையினா் திங்கள்கிழமை ஆஜா்படுத்தினா்.
தொடா்ந்து, சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறை சாா்பில் நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து 24 மணி நேரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டாா்.
இதையடுத்து போலீஸ் விசாரணை முடிந்த நிலையில் சவுக்கு சங்கரை உதகை நடுவா் நீதிமன்றத்தில் நீதிபதி தமிழினியன் முன்னிலையில் காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தினா். இதையடுத்து சவுக்கு சங்கரை சென்னை புழல் சிறைக்கு காவல்துறையினா் அழைத்துச் சென்றனா்.
சவுக்கு சங்கா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் பாலநந்தகுமாா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: சவுக்கு சங்கரை 24 மணி நேர காவலில் எடுத்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது, தமிழக அமைச்சா் ஒருவருக்கும் அவருக்கும் உள்ள தொடா்பு குறித்து இரவு 3 மணி வரை மீண்டும் மீண்டும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) உதகை நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது என்றாா்.