கேரளாவில் இதுவரை இல்லாத பேரழிவு – முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை
கேரளாவில் இதுவரை இல்லாத பேரழிவு நடந்திருப்பதாக வேதனை தெரிவித்துள்ள முதலமைச்சர் பினராயி விஜயன், 2 நாட்களில் 57 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக கூறினார்.
வயநாடு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்பு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், மீட்புப் பணியில் ராணுவம் மற்றும் கேரள அமைச்சர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறினார். பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் உதவி செய்வதாக உறுதியளித்ததாகவும் பினராயி விஜயன் குறிப்பிட்டார்.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் , இயற்கையின் கோரதாண்டவத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். நள்ளிரவில் பெய்த பேய் மழையால் சின்னாபின்னமானது கேரளாவின் வயநாடு. அடுத்தடுத்து 3 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு, கடவுளின் தேசத்தையை கண்ணீர்க் கடலில் ஆழ்த்தியது.
கொட்டும் மழையின்போது, செவ்வாயன்று நள்ளிரவு 1 மணி அளவில் முதல் நிலச்சரிவு முண்டக்கை டவுன் பகுதியில் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சூரல்மலை பகுதியில் உள்ள பள்ளி அருகே நிலம் சரிந்து , மக்கள் நிர்கதியாகினர். முகாமாக செயல்பட்ட இந்த பள்ளிக்கு அருகே இருந்த ஏராளமான வீடுகளும், கடைகளும் மண்ணிலும், சேற்றிலும் புதைந்தன.
அட்டமலா – முண்டக்கையை இணைக்கும் ஒரே பாலம் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சேதமடைந்ததால், மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதியை சென்றவடைவதில் கடும் சவால் ஏற்பட்டது. மேப்பாடி பகுதியும் நிலச்சரிவால் பாதிப்புக்கு உள்ளானது. நள்ளிரவு முதல் அதிகாலை நேரத்திற்குள் நடந்த இயற்கை பேரிடரின் கோரதாண்டவத்தில் சிக்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், மண்ணில் புதைந்தும் மாண்டனர்.
மலா பகுதிகள் பெரும் பாதிப்புகளை சந்தித்தப் பகுதிகளாக உள்ளன. வரலாறு காணாத பேரிடரை சந்தித்த மக்கள், மீட்புக் குழுவினரின் உதவியை நாடி வருகின்றனர்.
வயநாட்டில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் 6 பேர் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அட்டமா ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இதேபோன்று பொதுக்கல் என்ற இடத்திலும் சடலங்கள் ஆற்றில் கரை ஒதுங்கின. முண்டக்கை பகுதியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர் ஒருவர், பாறைகளை பிடித்து கொண்டு உயிருக்கு போராடிய வீடியோ இயற்கை சீற்றத்தின் கோரமுகத்தை காட்டியது.
இதேபோன்று முண்டக்கை பகுதியில் இருந்து தப்பித்த சுமார் 250 பேர் மேடான பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளனர். சுமார் 60 வீடுகள் மண்ணில் புதையுண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.