ஹமாஸிற்கு பேரிழப்பு:அரசியல் பிரிவு தலைவர் படுகொலை
ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் அந்த அமைப்பின் அரசியல் பிரிவு தலைவருமான இஸ்மாயில் ஹனியா( Ismail Haniyeh) கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வைத்து ஹனியா கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹமாஸின் அரசியல்பிரிவு தலைவர் ஹனியா மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் இவ்வாறு தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
உறுதி செய்த ஹமாஸ் அமைப்பு
தமது தலைவர் கொல்லப்பட்டதை ஹமாஸ் அமைப்பு உறுதி செய்துள்ளது.ஹமாஸ் அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,
தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹனியா கொல்லப்பட்டதாகக் கூறியது.
செவ்வாய்க்கிழமை பதவியேற்ற புதிய ஈரானிய ஜனாதிபதி மசூத் பிசாக்கியானின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின்னர் ஹனியா இறந்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தாக்குதலை நடத்தியது யார்
இஸ்ரேலிய இராணுவத்தினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலிய அரசாங்கம் எவ்வித தகவல்களையும் இதுவரையில் வெளியிடவில்லை.
இந்த சம்பவத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் “விசாரணை செய்யப்பட்டு வருகிறது” என்று ஈரானிய புரட்சிகர காவல்படை கூறியதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.