பொருளாதார யுத்தத்தை வெற்றிகொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிவரும் ஆதரவு மகத்தானது – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!
நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வேலைத் திட்டங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வருகின்ற ஆதரவு மகத்தானது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் அதை முன்னெடுத்துச்செல்ல முழுமையான ஒத்துழைப்பை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக வடக்கின் மக்களிடம் இருந்து கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் தனது வேலைத் திட்டங்களுக்கு, ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வருகின்ற ஆதரவை சுட்டிக்காட்டியதுடன், இவ்வாறான ஒத்துழைப்பு எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பை ஏற்று யாழ்ப்பாணத்திலுள்ள ஈ.பி.டி.பியின் தலைமை காரியாலயத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (03.08.2024) வருகை தந்திருந்தார்.
யாழ் அலுவலகத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஈபிடிபியின் ஆதரவாளர்கள் மகத்தான வரவேற்பளித்திருந்தனர். இதையடுத்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் – அதலபாதாழத்தில் வீழ்ந்து கிடந்த எமது நாட்டை கட்டியெழுப்பும் முயற்சியில் நான் இறங்கியபோது எனக்கு பெரும் பக்கபலமாகவும் உறுதுணையாகவும் இருந்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
அதுமட்டுமல்லாது இந்நாட்டின் கடற்றொழில் அமைச்சராக இருந்து நாட்டின் பொருளாதார ஈட்டலுக்கு மட்டுமல்லாது கடற்றொழில் மக்களுக்கு குறிப்பாக வடபகுதி மக்களுக்கான சிறந்த சேவையையும் ஆற்றிவருகின்றார்.
இதேவேளை யாழ் மாவட்டத்தை யாழ் நதி’ திட்டத்தின் ஊடாக பொருளாதாரத்தை பலப்படுத்த எதிர்பார்க்கிறோம். அத்துடன் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இந்தியாவுடன் கலந்தாலோசிக்கிறோம். சிமெந்து நிறுவனம் இருந்த இடத்தில் முதலீட்டு வலயமொன்று ஆரம்பிக்கப்படும்.
பூநகரியிலும் அதனை செய்வோம். பலாலியில் சுற்றுலா துறையை மேம்படுத்துவோம். காற்று, சூரிய சக்தி மூலம் பெருமளவில் இங்கு மின் உற்பத்தி செய்ய முடியும். அதனால் மேலும் பல பொருளாதார நன்மைகள் கிடைக்கும்.
அத்துடன் எதிர்வரும் 10 வருடங்களுக்குள் யாழ்ப்பாணம் அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாற்றப்படும். எனவே நாம் அடுத்தபடியாக பொருளாதார யுத்தத்தை எதிர்கொள்ள ஆரம்பிப்போம். அதற்கான பணிகளை நாம் முன்னெடுக்க வேண்டும். என தெரிவித்திருந்த ரணில் விக்ரமசிங்க அதற்கான முழுமையான ஒத்துழைப்பும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக வடக்கின் மக்களிடம் இருந்து கிடைக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.