ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு நேர்ந்த சோகம்
தமிழக மாவட்டம் திண்டுக்கலில் நபர் ஒருவர் சாலை விபத்தில் தனது குடும்பத்துடன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே உள்ள ரெண்டலப்பாறையைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஜார்ஜ் (30). இவரது மனைவி அருணா (28).
தனது மாமியாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், ஜார்ஜ் தனது மனைவி மற்றும் 2 பிள்ளைகளுடன் அவரையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பயணித்துள்ளார்.
அவர்கள் சென்ற வாகனம் நல்லாம்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் அவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியதாக கூறப்படுகிறது.
இதில் ஜார்ஜின் வாகனம் சுமார் 100 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, குழந்தைசாமி என்பவரின் இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியது.
இந்த விபத்தில் ஜார்ஜ், அருணா மற்றும் அவர்களின் பிள்ளைகள் ரக்ஷிதா (7), ரக்ஷன் (5) என அனைவரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், காயமடைந்த அருணாவின் தாய் சரோஜாதேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.